/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மெட்ரோ ரயில்' திட்டத்துக்கு... நிதியும், அனுமதியும் வழங்க வேண்டும் மத்திய அரசு!
/
'மெட்ரோ ரயில்' திட்டத்துக்கு... நிதியும், அனுமதியும் வழங்க வேண்டும் மத்திய அரசு!
'மெட்ரோ ரயில்' திட்டத்துக்கு... நிதியும், அனுமதியும் வழங்க வேண்டும் மத்திய அரசு!
'மெட்ரோ ரயில்' திட்டத்துக்கு... நிதியும், அனுமதியும் வழங்க வேண்டும் மத்திய அரசு!
ADDED : டிச 26, 2024 06:06 AM

கோவை; கோவையில், இரு வழித்தடங்களில் அமைக்க திட்டமிட்டுள்ள, 'மெட்ரோ ரயில்' திட்ட அறிக்கையில் கூறியுள்ள அம்சங்கள் பிரமிக்க வைக்கின்றன. அவற்றை மதிப்பாய்வு செய்து, அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீட்டை, மத்திய வீட்டு வசதி மற்றும் விவகாரங்கள் துறை அமைச்சகம் விரைந்து வழங்க வேண்டும் என்கிற, எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
கோவையில் அவிநாசி ரோட்டில், 20.4 கி.மீ., சத்தி ரோட்டில், 14.4 கி.மீ., என, 34.8 கி.மீ., துாரத்துக்கு 'மெட்ரோ ரயில்' இயக்க, சாத்தியக் கூறு ஆய்வு செய்யப்பட்டு, மத்திய வீட்டு வசதி மற்றும் விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்ட அறிக்கையை அனுப்பியுள்ளது.
திட்ட அறிக்கை மட்டுமின்றி, ஐந்தாண்டுக்கான போக்குவரத்து ஆய்வறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்ட அறிக்கை போன்றவற்றை, மத்திய அரசு மதிப்பாய்வு செய்யும். அதன்பின், எந்தெந்த வழித்தடத்தில் இயக்குவது என முடிவெடுத்து, அனுமதியும் நிதியும் ஒதுக்கும்.
நிதி பங்களிப்பு எப்படி?
மத்திய அரசு 15 சதவீதம்; மாநில அரசு 15 சதவீதம்; மீதமுள்ள 70 சதவீத தொகையை வங்கி கடனுதவி பெற முதலில் ஆலோசிக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 'சென்ட்ரல் செக்டாராக' மாற்றப்பட்டிருக்கிறது. அதேபோல், கோவையில் செயல்படுத்த உள்ள திட்டத்துக்கும், 'சென்ட்ரல் செக்டார்' திட்டத்தில், நிதி ஒதுக்க கோரப்படுகிறது.
பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் விமான நிலையங்கள் அருகிலேயே, மெட்ரோ ஸ்டேஷன் அமைக்க ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தேவையான நிலம் கையகப்படுத்தி, ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
அதில், மெட்ரோ ஸ்டேஷன் அமைக்க தேவைப்படும் நிலத்தை ஒதுக்கலாம். ஒரே வளாகத்தில், விமான நிலையம் மற்றும் மெட்ரோ ஸ்டேஷன் அமைந்தால், விமான பயணிகள் சிரமப்படாமல் 'மெட்ரோ'வில் எளிதாக பயணிக்க, வாய்ப்பு கிடைக்கும்.
ரயில் டூ மெட்ரோ ரயில்
இதேபோல், கோவை ரயில்வே ஸ்டேஷனை, ரூ.750 கோடிக்கு மேம்படுத்த தனியார் ஆலோசனை நிறுவனம் திட்ட அறிக்கை தயாரித்து சமர்ப்பித்திருக்கிறது. மெட்ரோவுக்கான வழித்தடம் மற்றும் ஸ்டேஷன் இவ்வளாகத்தில் அமையும் வகையில், வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, ஸ்டேஷன் உருவாக்கினால், வெளியூரில் இருந்து வரும் ரயில் பயணிகள் மெட்ரோவில் பயணித்து, இருப்பிடம் செல்ல முடியும்.
அடுத்த கட்டமாக, உக்கடத்தில் ரூ.20 கோடியில் டவுன் பஸ் ஸ்டாண்ட் புதிதாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் ரூ.30 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. இவ்வளாகங்களில், மெட்ரோ ஜங்சன் வர இருக்கிறது. பஸ்சில் வரும் பயணிகளும் அலைச்சல் இன்றி, மெட்ரோவில் பயணிக்க வாய்ப்பிருக்கிறது.
நகரில் நெரிசல் குறையும்
திட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதுபோல், வடிவமைப்பை மாற்றாமல், கட்டமைப்பு ஏற்படுத்தும் பட்சத்தில், கோவையில் வசிக்கும் மக்கள் பொதுப்போக்குவரத்தை மட்டும் பயன்படுத்தி, ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல வசதி கிடைக்கும்; தனி நபர் வாகன பயன்பாடு குறையும். நகரில் வாகன போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.
கட்டுமான பணி துவங்கிய நாளில் இருந்து, மூன்று அல்லது மூன்றரை ஆண்டுக்குள் முடிக்கலாம் என, மெட்ரோ ரயில் நிறுவனத்தினர் கருதுகின்றனர். இதற்கு மத்திய அரசின் அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு அவசியம் தேவை.
மெட்ரோ மட்டுமின்றி, ரயில்வே ஸ்டேஷன் மேம்பாடு மற்றும் விமான நிலையம் விரிவாக்கம் ஆகிய மூன்று திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கி, ஒரே நேரத்தில் செயல்படுத்த துவங்கினால், இன்னும் சில ஆண்டுகளில், கோவையின் வளர்ச்சி பிரமிக்கத்தக்க வகையில் மாறும். அதற்கு மாநில அரசு மட்டுமின்றி, தொழில்துறையினர் உள்ளிட்ட அனைத்து அமைப்பினரும் வலியுறுத்த வேண்டும்.