/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
1,400 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி 56வது வார்டில் அமைக்க ஆணையம் உத்தரவு
/
1,400 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி 56வது வார்டில் அமைக்க ஆணையம் உத்தரவு
1,400 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி 56வது வார்டில் அமைக்க ஆணையம் உத்தரவு
1,400 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி 56வது வார்டில் அமைக்க ஆணையம் உத்தரவு
ADDED : மார் 25, 2025 10:26 PM
கோவை; கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள, 56வது வார்டுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல் மற்றும், 1,400 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி தயார்படுத்த, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி, 56வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்ததால், அப்பதவி காலியாக உள்ளது. இது தவிர, மாவட்டத்தின் இதர பகுதிகளில், 12 உள்ளாட்சி பதவிகள் காலியாக இருக்கின்றன.
சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், மே மாதம் இடைத்தேர்தல் நடத்தி, காலி பதவிகளை பூர்த்தி செய்ய, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுத்திருக்கிறது. அதற்கான பூர்வாங்கப் பணிகளை துவக்கியுள்ளது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில், 1,200 வாக்காளர்களுக்கு மிகாமலும், கோவை மாநகராட்சியில் 56வது வார்டில், 1,400 வாக்காளர்களுக்கு மிகாமலும் ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்த வேண்டும்.
நடப்பாண்டு ஜன., மாதம் வெளியிட்ட, சட்டசபை வாக்காளர் பட்டியல் அடிப்படையில், உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான பட்டியல் தயாரிக்க வேண்டும். வாக்காளர்கள் எவரும் விடுபடவில்லை என்பதை, உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வாக்காளர் பட்டியல், ஓட்டுச்சாவடி பட்டியல்களை உரிய காலத்துக்குள் தயாரித்து வைத்திருக்க வேண்டும். ஏப்., 21க்குள் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும்.
ஏப்., 24க்குள் புகைப்படத்துடன் கூடிய, பட்டியலை பதிவிறக்கம் செய்ய வேண்டும்; இவற்றை அச்சிடுவது, வெளியிடுவது தொடர்பான அறிவுரை, பின்னர் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.