/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்களை போட்டு 'கசக்கிப் பிழிகிறது' மாநகராட்சி! சொத்து வரி உயர்வு 6 சதவீதம்... செலுத்தாதவர்களுக்கு அபராதம்
/
மக்களை போட்டு 'கசக்கிப் பிழிகிறது' மாநகராட்சி! சொத்து வரி உயர்வு 6 சதவீதம்... செலுத்தாதவர்களுக்கு அபராதம்
மக்களை போட்டு 'கசக்கிப் பிழிகிறது' மாநகராட்சி! சொத்து வரி உயர்வு 6 சதவீதம்... செலுத்தாதவர்களுக்கு அபராதம்
மக்களை போட்டு 'கசக்கிப் பிழிகிறது' மாநகராட்சி! சொத்து வரி உயர்வு 6 சதவீதம்... செலுத்தாதவர்களுக்கு அபராதம்
ADDED : அக் 04, 2024 11:42 PM

கோவை : கோவை மாநகராட்சியில், சொத்து வரி 6 சதவீதம் உயர்வு, அக்., 1 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. ஏப்., - செப்., வரையிலான ஆறு மாதத்துக்கான முதல் தவணை சொத்து வரியை, செலுத்தாமல் இருந்தால், இனி ஒரு சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும்.
கோவை மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் சொத்து வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி, பாதாள சாக்கடை சேவை வரி மற்றும் தொழில் வரி உள்ளிட்டவை வசூலிக்கிறது.
இதில், ஏப்., - செப்., மற்றும் அக்., - மார்ச் வரை ஆறு மாதத்துக்கு ஒருமுறை என ஆண்டுக்கு இரு முறை சொத்து வரி செலுத்த வேண்டும்.
அபராதமும் செலுத்தணும்
முதல் தவணை சொத்து வரி செலுத்துவதற்கான அவகாசம், செப்., 30ல் முடிந்து விட்டது. அதனால், வரும் நாட்களில் செலுத்தும்போது, ஒரு சதவீதம் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டாவது தவணைக்கான சொத்து வரியை அக்., 30க்குள் செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அதேநேரம், 2022ல் பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் உத்தரவுப்படி, 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த வரி உயர்வு, அக்., 1 முதல் அமலுக்கு வந்திருக்கிறது.
கடந்த நிதியாண்டுகளில் சொத்து வரி வசூலில், கோவை மாநகராட்சி மாநில அளவில் முதலிடத்தில் இருந்தது. தற்போது இரண்டாமிடத்தில் இருக்கிறது. ஆண்டுக்கு, 96 சதவீதம் வரி வசூல் எட்டப்படும். அதன்படி, சராசரியாக மாதம் 8 சதவீதம் அடிப்படையில், முதல் ஆறு மாதங்களில், 48 சதவீதத்தை எட்டியிருக்க வேண்டும். ஆனால், 35.68 சதவீதமே எட்டப்பட்டு உள்ளது.
வரி வருவாய் பெருக்க திட்டம்
இச்சூழலில், மாநகராட்சியின் வருவாயை பெருக்கும் நோக்கத்தில், 'டிரோன்' சர்வே மூலம் வார்டு வார்டாகச் சென்று கட்டடங்கள் மறுஅளவீடு செய்யப்படுகின்றன.
கூடுதல் பரப்பு கட்டப்பட்டிருக்கும் கட்டடங்கள் மற்றும் வணிக பயன்பாடுடன் மாற்றம் செய்யப்பட்டுள்ள கட்டடங்களுக்கு, கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.
வர்த்தக பகுதிகள் நிறைந்த, 40 வார்டுகள் பட்டியலிடப்பட்டு, இவ்வகை கட்டடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.
இவ்வகையில், 25 கோடி ரூபாய் வரை வரி வருவாயை அதிகப்படுத்த, மாநகராட்சி வருவாய்பிரிவினர் பணியாற்றி வருகின்றனர்.
ஊக்கத்தொகையும் உண்டு
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'தமிழக அரசின் உத்தரவுப்படி, அக்., 1 முதல் சொத்து வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது; அக்., 30க்குள் செலுத்தினால், ஊக்கத்தொகை பெறலாம்.
'கடந்த, 2022-23ம் நிதியாண்டிலேயே சொத்து வரி உயர்த்தியிருக்க வேண்டும். லோக்சபா தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
'தற்போது அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டதால், உயர்வு செய்யப்பட்டிருக்கிறது' என்றனர்.