/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தகதகவென ஜொலிக்கும் கரிவரதராஜப்பெருமாள் கோவில்; இன்று வைகுண்ட ஏகாதசி விழா
/
தகதகவென ஜொலிக்கும் கரிவரதராஜப்பெருமாள் கோவில்; இன்று வைகுண்ட ஏகாதசி விழா
தகதகவென ஜொலிக்கும் கரிவரதராஜப்பெருமாள் கோவில்; இன்று வைகுண்ட ஏகாதசி விழா
தகதகவென ஜொலிக்கும் கரிவரதராஜப்பெருமாள் கோவில்; இன்று வைகுண்ட ஏகாதசி விழா
ADDED : டிச 30, 2025 07:31 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. விழாவையொட்டி, கோவில் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கிறது.
பொள்ளாச்சி கடைவீதியில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது.இங்கு, கொடி மரம், விநாயகர், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், கருடாழ்வார் சன்னதி, சக்கரத்தாழ்வார், நரசிம்மர் சன்னதிகளும் உள்ளன.
ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா மூன்று நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முதல் நாள் மோகினி அலங்காரத்தில் உற்சவ மூர்த்தி காட்சியளிக்கிறார். மூலவர், முத்தங்கி அலங்காரத்தில் மூன்று நாட்களுக்கு பக்தர்கள் அருள்பாலிப்பது சிறப்பம்சம்.
மேலும், சொர்க்க வாசலில், பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற வழங்கும் பொருட்கள், அலங்கரித்து கட்டப்படும். அதில், இல்லாத பொருட்களே இல்லை என்றளவுக்கு பொருட்கள் பார்வையாளர்கள் மனதை கவரும் வகையில் இருக்கும்.
நடப்பாண்டு, அறங்காவலர்கள் பொறுப்பேற்ற நிலையில், கோவில் மூலவர் சன்னதி புதுப்பிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில், கோவில் முகப்பு பகுதியில் பக்தர்கள் வரிசையாக நின்று செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. முகப்பில், தென்னை ஓலைகளால் பின்னப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பூக்களால் கோவில் வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மூலவர் சன்னதி முழுவதும், பித்தளை தகடுகள் பதித்து ஜொலிக்கின்றன. சொர்க்க வாசலில், மலை போன்று அமைத்து ஏழுமலையான் காட்சியளிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. 'செல்பி பாயின்ட்' அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்களுக்கு தேவையான வசதிகளை அறங்காவலர்கள், செயல் அலுவலர் தமிழ்செல்வன் செய்து வருகின்றனர்.
அறங்காவலர் குழு தலைவர் மணி கூறியதாவது:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, மூலவர் சன்னதி முகப்பு பகுதி, ஒன்பது லட்சம் ரூபாய் செலவில், பித்தளை தகடுகளால் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதில், பத்து அவதாரங்கள், பெருமாள் படங்களும் இடம் பெற்றுள்ளன.
அதே போன்று நன்கொடையாளர் வேலுமணி என்பவர், நான்கு லட்சம் ரூபாய் செலவில் சொர்க்கவாசல் பகுதியில் இருந்து ெஷட் முழுவதுமாக அமைத்து கொடுத்துள்ளனர்.
அதே போன்று, அறங்காவலர்கள் வாயிலாக, லட்சுமி ஹயக்ரீவர் ஐம்பொன் சிலையும், நன்கொடையாளர் பலராமன் வாயிலாக, தன்வந்திரி சிலையும் பெறப்பட்டுள்ளன. கோவிலில் தொடர்ந்து விஷ்ணுபதி புண்யகால பூஜை, நட்சத்திரங்களுக்கான பூஜைகளும் நடத்தப்படுகின்றன.
வைகுண்ட ஏகாதசியையொட்டி, பக்தர்களுக்கு தேவையான வசதிகள், போதுமான பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மூன்று நாட்களும் முத்தங்கி சேவையில் பெருமாள் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் பெருமாள் அருள் பெற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

