/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டாப்சிலிப் முகாமில் வளர்ப்பு யானை இறப்பு
/
டாப்சிலிப் முகாமில் வளர்ப்பு யானை இறப்பு
ADDED : பிப் 11, 2025 12:09 AM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, டாப்சிலில் முகாமில் இருந்த, வளர்ப்பு யானை ராமு உடல்நலக்குறைவால் நேற்று இறந்தது.
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் அருகே கோழிகமுத்தி, வரகளியாறு யானை முகாம்களில் மொத்தம், 27 யானைகள் பராமரிக்கப்பட்டன.
இங்குள்ள யானைகள், கும்கி யானைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வயதான யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. அதில், கடந்த, 1978ம் ஆண்டு நவ., 20ம் தேதி கன்னியாகுமரி - காளிதேசம் வனப்பகுதியில் இருந்து பிடித்து வரப்பட்ட ஆண் யானை, ராமு என்ற பெயருடன் கும்கியாக வளர்க்கப்பட்டது. நல்ல சவாரி யானையாக இருந்தது.
நேற்று உடல்நலக்குறைவால் ராமு யானை இறந்தது. யானை இறந்ததை கண்ட பாகன்கள், காவடிகள் வாயிலாக சடங்குகள் செய்யப்பட்டன.
டாப்சிலிப் வனச்சரகர் சுந்தரவேல் கூறியதாவது:
வரகளியாறு யானை முகாமில் பராமரிக்கப்பட்ட, 55 வயதான ராமு யானை, பொதுவான பலவீனம் மற்றும் உடல் நலக்குறைவாக இருந்ததால், கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த, இரண்டு நாட்களாக யானையின் உடல் நிலை மிக பலவீனமாக இருந்தது; மேய்ச்சலை தவிர்த்து, அடர் உணவு மற்றும் தண்ணீர் மட்டுமே உட்கொண்டது.
ரத்த சோகை, நீரிழப்பு பாதிப்பு ஏற்பட்டு, செரிமான கோளாறு இருந்தது. மருந்துகள், செரிக்க கூடிய பசுந்தீவனம் கொடுக்கப்பட்டது. வரகளியாறு குழு, கால்நடை டாக்டர் விஜயராகவன் கண்காணிப்பில் யானை இருந்தது. சிகிச்சையால் எவ்வித பலனும் இல்லாமல், நேற்று காலை, 6:20 மணிக்கு இறந்தது. இதையடுத்து, பிரதே பரிசோதனை செய்து, உடல் அங்கேயே அடக்கம் செய்யப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
எண்ணிக்கை சரிவு
டாப்சிலிப் யானை முகாமில் கடந்த, 2022ம் ஆண்டு விஜயலட்சுமி என்ற யானை இறந்தது. அதன்பின், கடந்த சில ஆண்டுகளில், சாரதா, ராஜவர்தன் இறந்ததையடுத்து, ராமு யானையும் இறந்தது.
இதனால், வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை, 23 ஆக குறைந்துள்ளது.