/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதிமீறலை தடுக்க தேர்தல் கமிஷன் யுத்தி சுழலும் கேமரா பொருத்திய வாகனம் தயார்
/
விதிமீறலை தடுக்க தேர்தல் கமிஷன் யுத்தி சுழலும் கேமரா பொருத்திய வாகனம் தயார்
விதிமீறலை தடுக்க தேர்தல் கமிஷன் யுத்தி சுழலும் கேமரா பொருத்திய வாகனம் தயார்
விதிமீறலை தடுக்க தேர்தல் கமிஷன் யுத்தி சுழலும் கேமரா பொருத்திய வாகனம் தயார்
ADDED : மார் 13, 2024 04:58 AM

திருப்பூர் : தேர்தல் விதிமீறல்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காக, தேர்தல் கமிஷன், புதிய மொபைல் போன் செயலி உருவாக்கியுள்ளது.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தேர்தலை திறம்பட நடத்தி முடிக்க இந்திய தேர்தல் கமிஷன் முனைப்பு காட்டி வருகிறது. தேர்தல் விதிமீறல்களை கண்டறிந்து தடுக்க பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழு, வீடியோ பதிவு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தேர்தலிலும், விதிமீறல்களை தடுக்க வெவ்வேறு மாற்றங்களை தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வகையில், இந்த தேர்தலில், பறக்கும்படை குழுவினருக்கு, மெகா சுழல் கேமரா பொருத்திய வாகனங்கள் வழங்கப்பட உள்ளன.
பறக்கும்படை வாகனம் எங்கெங்கு செல்கிறது; கள நிலவரம் என்ன என்கிற விவரங்கள் சுழல் கேமரா வாயிலாக படம்பிடிக்கப்பட்டு, உடனுக்குடன் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டு விடும். முந்தைய தேர்தல்களில், உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்டு, பறக்கும்படையினரால் கைப்பற்றப்படும் பணம், பரிசு பொருள் குறித்த விவரங்கள் கைப்பட எழுதப்பட்டு வந்தது.
தற்போது, பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழுவினர் பயன்பாட்டுக்காக இ.எஸ்.எம்.எஸ்., (எலக் ஷன் ஷீசர் மேனேஜ்மென்ட் சிஸ்டம்) என்கிற புதிய செயலியை தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியுள்ளது.
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் கட்டுப்பாட்டில், பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழு மற்றும் மாவட்ட அளவிலான வங்கி ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் மொபைல் போனில் இந்த செயலி நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.
உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்டு பிடிபடும் பணம், பரிசு பொருள் குறித்த முழு விவரங்கள், நிகழிடம், கள நிகழ்வுகளை நேரலை வீடியோ காட்சிகளை பதிவு செய்யும் வசதி இந்த செயலியில் உள்ளது. தேர்தல் விதிமீறல் குறித்து இந்த செயலியில் பதிவு செய்யப்படும் விவரங்களை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், தலைமை தேர்தல் அலுவலர் ஆகியோருக்கு உடனுக்குடன் சென்றடைந்து விடும்.
இந்த செயலியை பயன்படுத்தி, தேர்தல் விதிமீறல்களை பதிவு செய்வது குறித்து, பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

