/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டுக்கு வந்து அரிசியை ஒரு பிடி பிடித்த யானை
/
வீட்டுக்கு வந்து அரிசியை ஒரு பிடி பிடித்த யானை
ADDED : பிப் 15, 2024 06:48 AM

தொண்டாமுத்தூர் : நல்லூர் வயலில், வீடு மற்றும் தோட்டங்களில் சேதம் ஏற்படுத்தி வரும், காட்டு யானைகளை தடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுக்கரை மற்றும் போளுவாம்பட்டி வனச்சரகத்தின் எல்லை பகுதியாக, நல்லூர் வயல் பகுதி உள்ளது. இப்பகுதியில், காட்டு யானைகள் தினசரி வனப்பகுதியை விட்டு வெளியேறி, குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தோட்டங்களுக்குள் புகுந்து, சேதம் ஏற்படுத்தி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு, கல்கோத்திபதி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக்காட்டு யானை, நல்லூர்வயலில் உள்ள மாரிமுத்து என்பவரின் வீட்டின் முன் வந்துள்ளது. யானையின் சப்தம் கேட்டு, தம்பதிகள் வீட்டின் உள்ளே பதுங்கிக் கொண்டனர்.
வீட்டின் கதவை உடைத்து சேதப்படுத்தி, அரிசி மூட்டையை எடுத்து உட்கொண்டது. பின், அருகில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து, தென்னை மரங்களை சேதப்படுத்தி, அதிகாலையில் வனப்பகுதிக்குள் சென்றது.
நல்லூர் வயல் பகுதியில், காட்டு யானைகள் தினசரி வருவதால், பொதுமக்கள் அச்சத்துடனே இருக்க வேண்டியதுள்ளது. எனவே, காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

