/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொப்பரை கிலோ ரூ.184க்கு விற்பனை ஏலத்தில் உச்சபட்ச விலை
/
கொப்பரை கிலோ ரூ.184க்கு விற்பனை ஏலத்தில் உச்சபட்ச விலை
கொப்பரை கிலோ ரூ.184க்கு விற்பனை ஏலத்தில் உச்சபட்ச விலை
கொப்பரை கிலோ ரூ.184க்கு விற்பனை ஏலத்தில் உச்சபட்ச விலை
ADDED : ஏப் 01, 2025 10:16 PM

ஆனைமலை, ;ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், கொப்பரை கிலோவுக்கு, 184 ரூபாய் விலை கிடைத்தது. இது, கொப்பரை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத உச்சபட்ச விலையாக கருதப்படுகிறது.
ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், நெல் மற்றும் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. அதில், தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், கொப்பரை விற்பனைக்காக வெளியூர்களுக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து, விவசாயிகள் நேரடியாக வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் வகையில், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடக்கிறது.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை, 262 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 174 முதல், 184.50 ரூபாய் வரை விலை கிடைத்தது.
இரண்டாம் தர கொப்பரை, 311 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 121 முதல், 155 ரூபாய் வரை விலை கிடைத்தது.மொத்தம், 573 கொப்பரை மூட்டைகளை, 86 விவசாயிகள் கொண்டு வந்தனர்; ஆறு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
இந்த வாரம், 44.09 லட்சம் ரூபாய் மதிப்பிலான, மொத்தம், 257.85 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன.
ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் கூறியதாவது:
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கடந்த, 2024 - 25ம் ஆண்டில் கொப்பரை, 16 கோடியே, 47 லட்சத்து, 85 ஆயிரத்து, 516 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மொத்தம், 15,700 குவிண்டால் விற்கப்பட்டது. 11,393 விவசாயிகள் பயன் அடைந்தனர்.
கொப்பரை விலை உயர்ந்து வந்த நிலையில், இந்த வாரம், அதிகபட்சமாக, 184.50 ரூபாய்க்கு விற்பனையானது. இதுவரை நடந்த கொப்பரை ஏலத்தில், இதுவே உச்சபட்ச விலையாகும். இது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு, கூறினார்.