/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளை முதல் ஆணையம் வசமாகிறது எல் அண்டு டி பைபாஸ்; இனி சாலையை அகலப்படுத்துவதில் தடையேதுமில்லை!
/
நாளை முதல் ஆணையம் வசமாகிறது எல் அண்டு டி பைபாஸ்; இனி சாலையை அகலப்படுத்துவதில் தடையேதுமில்லை!
நாளை முதல் ஆணையம் வசமாகிறது எல் அண்டு டி பைபாஸ்; இனி சாலையை அகலப்படுத்துவதில் தடையேதுமில்லை!
நாளை முதல் ஆணையம் வசமாகிறது எல் அண்டு டி பைபாஸ்; இனி சாலையை அகலப்படுத்துவதில் தடையேதுமில்லை!
ADDED : மார் 30, 2025 11:35 PM

கோவை; கோவை, நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரையிலான, 28 கி.மீ., வரையிலான எல் அண்டு டி பைபாஸ், நாளை முதல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசமாகிறது.
மே வரை இரு மாதங்கள் சுங்கம் வசூலிக்கும் பொறுப்பு, அந்நிறுவனத்துக்கே வழங்கப்பட்டிருக்கிறது.
சேலத்தில் இருந்து கோவை வழியாக, கேரளா செல்லும் கொச்சின் சாலை, நீலாம்பூர் அருகே கடக்கிறது. நீலாம்பூரில் இருந்து பாலக்காடு ரோட்டில் மதுக்கரை வரை, 28 கி.மீ., துாரத்துக்கு, பி.ஓ.டி., என்கிற (Build, Operate, Transfer) கட்டி, இயக்கி, ஒப்படைத்தல் என்கிற திட்டத்தில், எல் அண்டு டி நிறுவனத்தால் பைபாஸ் உருவாக்கப்பட்டது.
1999ல் இச்சாலை பயன்பாட்டுக்கு வந்தது; 30 ஆண்டுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது; 2029 வரை ஒப்பந்த காலம் உள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள், கோவை நகர நெரிசலில் சிக்காமல் சேலம், திருச்சி நோக்கிச் செல்லவும், எதிர் திசையில் வரும் வாகனங்கள் கேரளா செல்லவும், இச்சாலை பேருதவியாக இருக்கிறது.
அதேநேரம், இச்சாலையில் ஏற்படும் விபத்துகள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; கடந்த ஓராண்டில் மட்டும், 121 பேர் உயிரிழந்திருப்பதாக, சமீபத்தில் எடுத்த ஆய்வில் தெரியவந்தது. அதனால், அச்சாலையை அகலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக, எல் அண்டு டி நிறுவனத்திடம் பேச்சு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒப்பந்த காலத்துக்கு முன்னதாகவே, அச்சாலையை திரும்ப பெற்றுள்ள, மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம், நாளை முதல் சுங்கம் வசூலிக்கும் பொறுப்பை, ஆணையத்திடம் வழங்கியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
நீலாம்பூர் - மதுக்கரை வரையிலான சாலை ஆணையம் கட்டுப்பாட்டில் வருகிறது; பராமரிக்கும் பணியை, ஏஜன்சியிடம் ஒப்படைக்க டெண்டர் கோரும் நடைமுறை பின்பற்ற அவகாசம் தேவை. அதனால், இரு மாதங்களுக்கு எல் அண்டு டி நிறுவனமே தொடர்ந்து பராமரிக்க உள்ளது.
மே 31 வரை சுங்கம் வசூலித்து, ஆணையத்தின் வங்கி கணக்கில் அத்தொகையை செலுத்தும். இரு மாதத்துக்கான பராமரிப்பு தொகையை, ஆணையம் வழங்கும்.
இவ்வழித்தடத்தில் ஆறு இடங்களில், சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில், மதுக்கரை பகுதியில் மட்டும் தொடர்ந்து பயன்படுத்துவது; மற்ற இடங்களில் அகற்றுவதற்கான முன்மொழிவு தயாராகி வருகிறது.
அமைச்சகத்தில் ஒப்புதல் பெற்று, ஜூன் 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது. சாலை அகலப்படுத்தும் பணியை யார் மேற்கொள்வதென இனி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.