சிங்கப்பெண்கள் கடன் திட்டம் சுய உதவி குழுக்களுக்கு குட்லக்
சிங்கப்பெண்கள் கடன் திட்டம் சுய உதவி குழுக்களுக்கு குட்லக்
UPDATED : அக் 29, 2026 10:51 PM
ADDED : அக் 29, 2026 10:46 PM
கோவை: கோவை மாநகரில் 8,585, கிராமப்புறங்களில் 7,659 குழுக்கள் செயல்படுகிறது. இக்குழுக்களில் உள்ள 1.55 லட்சம் பெண்கள், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருமானம் ஈட்டி வருகின்றனர்.
சுய உதவி குழுக்களின் எண்ணிக்கை மற்றும் வருமானத்தை அதிகரிக்க அரசு புதிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், பெண்களின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தவும், நிதி சுதந்திரம் பெற உதவவும் ‘சிங்கப்பெண்கள் கடன் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க அரசு ரூ.7,015 கோடி ஒதுக்கியுள்ளது.
இத்திட்டத்தில், நடப்பு நிதியாண்டில் கோவை மாவட்டத்திற்கு ரூ.185 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 915 குழுக்களுக்கு ரூ.92 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 463 குழுக்களுக்கு ரூ.51 கோடியும், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 395 குழுக்களுக்கு ரூ.34 கோடியும் வழங்கப்பட்டுள்ளன. நகர்ப்புற கூட்டுறவு சங்கங்கள் மூலமும் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு குழுவின் தொழில் தேவைக்கு ஏற்ப, அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
பிற மாவட்டங்களை விட கோவையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் செய்யும் சுயதொழில்கள் நல்ல லாபம் தருகின்றன. குறிப்பாக, சிறுதானிய உணவுகள் மற்றும் ஹெல்த் மிக்ஸ் தயாரிக்கும் தொழில்கள் சிறப்பாக இருக்கிறது. இதில் ஈடுபடும் குழுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
