/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெருநாய்களை கட்டுப்படுத்த கடிவாளம்!களமிறங்கிய கால்நடைத்துறை
/
தெருநாய்களை கட்டுப்படுத்த கடிவாளம்!களமிறங்கிய கால்நடைத்துறை
தெருநாய்களை கட்டுப்படுத்த கடிவாளம்!களமிறங்கிய கால்நடைத்துறை
தெருநாய்களை கட்டுப்படுத்த கடிவாளம்!களமிறங்கிய கால்நடைத்துறை
ADDED : அக் 06, 2025 11:08 PM
பொள்ளாச்சி:உள்ளாட்சி அமைப்புகள் தோறும் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை செய்தும், 'ரேபிஸ்' தடுப்பூசி தடுப்பூசி செலுத்தியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கால்நடைத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டுகளில், சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு கால்நடைத்துறை வாயிலாக, 'ரேபிஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதி கால்நடை டாக்டர் தலைமையிலான குழுவினர், இதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, தற்போது வரை, 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு 'ரேபிஸ்' தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதேபோல, ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் தெருநாய்களுக்கு 'ரேபிஸ்' தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தெருநாய்களை கட்டுப்படுத்தும் வகையில், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யவும், தெருநாய்களுக்கு உணவளித்தல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து, கால்நடைத்துறையினர் கூறியதாவது: பல இடங்களில் தெருநாய்களால், பாதசாரிகள் மற்றும் வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுவதாக, புகார் எழுகிறது. தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, அவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்' என, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு, ஏற்கனவே வழிகாட்டுதல் வழங்கி உள்ளது.
இருப்பினும், இப்பணிகள் முழுவீச்சில் நடக்காமல் இருந்தது. தற்போது, கால்நடை துறை வாயிலாக தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கான மருத்துவ வசதி உருவாக்கப்பட்டு வருகிறது. கால்நடை டாக்டர், உதவியாளர் உள்ளிட்டோருக்கு உரிய ஆலோசனை வழங்கப்படும்.
தற்போது, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 'ரேபிஸ்' தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊராட்சிகளில் தடுப்பூசி செலுத்த ஒன்றிய அலுவலக அலுவலர்களுடன் கலந்தாலோசிக்கப்படுகிறது. கிராமங்களில், நாய்களை பிடித்துத் தர, போதிய பணியாளர்களை நியமிக்கவும் கோரப்பட்டுள்ளது.
தெருநாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது போல, தெருநாய்கள் மீது எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டுதல்களை அரசு வழங்கியவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதன் வாயிலாக, மனித - தெருநாய்கள் இடையிலான முரண்பாடு முற்றிலும் களையப்படும்.இத்திட்டம் வாயிலாக, தெருநாய்கள் எண்ணிக்கை படிப்படியாக குறையும். மக்களுக்கும் புரிதல் ஏற்படும். தெருநாய்களால் அச்சுறுத்தல் குறையும். விபத்து தவிர்க்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.