/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிலிப்பைன்ஸ் பெண்களின் கடற்கன்னி அவதாரம்!
/
பிலிப்பைன்ஸ் பெண்களின் கடற்கன்னி அவதாரம்!
ADDED : அக் 06, 2024 03:23 AM

கோவை வ.உ.சி., மைதானத்தில் நடந்து வரும் வண்ண மீன்கள் கண்காட்சியில், மீன்கள் பார்வையாளர்களை கவர்ந்திழுத்ததோ இல்லையோ, கடற்கன்னிகள் அனைவரையும் கட்டிப்போட்டுள்ளனர்.
மீன்களின் நடுவே, நேரடியாக நீந்தி மகிழ்விக்கும் இந்த அழகான கடற்கன்னிகள் ஐ.டி., ஊழியர், வங்கி மேலாளர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை!
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த இப்பெண்கள், டானா ஆன்ட்ரியா பாராஸ்(டானா), யாலான்டா பிரிடென்சியாடோ (திவாத்தா), அலெக்சிஸ் ஜெனி கலாங்(லெக்ஸி), கரிசியா டி லியோன்(காரி) ஆகிய இந்த கடற்கன்னிகளை, சாய்பாபா காலனியில் அவர்கள் தங்கியுள்ள அபார்ட்மென்ட் அறையில் சந்தித்தோம்...!
பக்கா டிரெண்டி டிரெஸ்சில், லேப்டாப் சகிதம் ஜாலியாக இருந்த இப்பெண்கள், நம்மை புன்னகையுடன் வரவேற்றனர்.
இவர்களில், டானா, ஐ.டி., துறையில் பணிபுரிந்து வருகிறார். வங்கியில் பணிபுரிந்து வரும் திவாத்தாவுக்கு திருமணம் முடிந்து, ஒன்பது வயதில் குழந்தை உள்ளார். லெக்ஸி மற்றும் காரி இருவர் உட்பட அனைவரும், நீர்மூழ்கி சாகச விரும்பிகள் (Sea divers)!
எதற்காக இந்த கடற்கன்னி அவதாரம்?
எங்கள் நாட்டில் இயற்கை வளம் அதிகளவில் உள்ளது. சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால், கடற்கன்னிகள் என்ற கான்செப்ட், இன்னும் பிரபலமடையவில்லை. எங்கள் நாட்டில் கடற்கன்னிகளாக(மெர்மெய்ட்) பணியாற்ற, பெரியளவில் வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்தியாவில், பெங்களூருவில், நல்ல வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்து கோவை வந்துள்ளோம். எங்களுக்கு இது மிகவும் பிடித்துள்ளது.
நீருக்குள் நீண்ட நேரம் இருப்பது, பிரச்னையாக இல்லையா?
துவக்கத்தில் சற்று கடினமாக இருந்தது. அதன்பின் பழகி விட்டது. நீரில் நீண்ட நேரம் இருப்பதற்காக பயிற்சி எடுத்துள்ளோம். குறிப்பாக, மூச்சடக்குவதற்கு சிறப்பு பயிற்சி எடுத்துள்ளோம். சீனாவில், இதற்காக பயிற்சி அளிக்கப்படுகிறது. நாங்கள் நீர்மூழ்கி சாகச விரும்பிகள் என்பதால், இது எங்களுக்கு எளிதாக உள்ளது.
ஒரு பக்கம் வங்கி, ஐ.டி., ஊழியர்; இன்னொரு பக்கம் கடற்கன்னி...கொஞ்சமும் சம்பந்தமில்லையே?
இது எங்களது பேரார்வம். இங்கு எங்களுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்காகவே குடும்பம், குழந்தையை விட்டு இங்கு வந்துள்ளோம்.
மக்கள் எங்களை ரசிக்கின்றனர். இது புதுவித அனுபவமாக உள்ளது. எங்களை ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.
குறிப்பாக, எங்கள் நாட்டில் ஆடை கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால், இங்கு முழு உடை அணிய முடிகிறது. இது எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்திய கலாசாரம், பண்பாட்டை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
ேஷா இல்லாதபோது எங்களிடம் வந்து, 'நீங்கள் தானே 'கடல் கன்னி?' எனக் கேட்கின்றனர்.
உங்களுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா எனக் கேட்கின்றனர். குறிப்பாக, குழந்தைகள் எங்கள் மீது செலுத்தும் அன்பு, உருக வைக்கிறது.
வீ லவ் கோவை கிட்ஸ்!