/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கருமத்தம்பட்டி வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க வேண்டும்! தொழிற்துறையினர், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
கருமத்தம்பட்டி வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க வேண்டும்! தொழிற்துறையினர், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கருமத்தம்பட்டி வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க வேண்டும்! தொழிற்துறையினர், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கருமத்தம்பட்டி வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க வேண்டும்! தொழிற்துறையினர், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 14, 2025 10:11 PM

சூலுார்:
கோவையில் இருந்து நீலம்பூர் வரை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை, கருமத்தம்பட்டி வரை நீட்டிக்க வேண்டும், என, தொழிற்துறையினர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில், 34.8 கி.மீ., தூரத்துக்கு, 10 ஆயிரத்து,740 கோடி ரூபாயில், இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அவிநாசி ரோடு, சத்தி ரோட்டில் அமைய உள்ள மெட்ரோ திட்டத்தில், 32 ஸ்டேஷன்கள் அமைக்கப்பட உள்ளன. அவிநாசி ரோடு திட்டத்தில் நீலம்பூரில் மெட்ரோ ரயிலுக்கான தலைமை அலுவலகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஒப்புதலுக்கு இறுதி திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கோவையில் மெட்ரோ திட்ட இயக்குனர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார். இம்மாதத்தில் இருந்து நிலம் கையகப்படுத்தும் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட உள்ளன.
நெரிசல் குறையும்
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதால், போக்குவரத்து நெரிசல் குறையும். மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு, குறுகிய நேரத்தில் பயணிக்க முடியும். திட்டம் எப்போது துவங்கி பயன்பாட்டுக்கு வரும் என, கோவை நகர் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
தொழிற்சாலைகள் அதிகம்
கோவை மாவட்டத்தின் கிழக்கு புறநகராக உள்ள அரசூர், கணியூர், கருமத்தம்பட்டி, சோமனூர், மோப்பிரிபாளையம் பகுதிகளில், லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். ஏராளமான இன்ஜினியரிங் தொழிற்சாலைகள், உதிரி பாகங்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், பவுண்டரிகள் உள்ளன. இவற்றில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பெரும்பாலானோர், கோவை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தங்களது நிறுவனங்களுக்கு வந்து செல்கின்றனர். இதனால், காலை, மாலை நேரங்களில் இப்பகுதிகளில் பஸ்களில் கூட்டம் அலை மோதும். போதுமான பஸ்கள் இல்லாததால், தினமும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அலைச்சலுக்கு உள்ளாவது வாடிக்கையாக உள்ளது.
மெட்ரோ ரயில் வேண்டும்
நீலம்பூர் வரை திட்டமிடப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை கருமத்தம்பட்டி வரை நீட்டிக்க வேண்டும், என்ற கோரிக்கையை தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள், புறநகர் மக்கள் எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து தொழில்துறையினர் கூறியதாவது :
நீலம்பூரில் இருந்து கருமத்தம்பட்டி வரையும், அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான நிறுவனங்கள் செயல்படுகின்றன. பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பள்ளி, கல்லுாரிகள் பல உள்ளன. பல்நோக்கு சரக்கு முனையம் வர உள்ளது. இப்பகுதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதனால், இப்பகுதிக்கும் மெட்ரோ ரயில் அவசியம். நகரில் அமையவுள்ள திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆனால், நீலம்பூரில் இருந்து கருமத்தம்பட்டி வரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. ஆறு வழிச்சாலை உள்ளதால், எளிதில் திட்டத்தை செயல்படுத்த முடியும். அதனால், திட்டத்தை நீட்டித்தால், புறநகர் பகுதி மேலும் வளர்ச்சி அடையும். அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.