/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பக்தி மணம் கமழும் பங்குனி மாதம்; கோவில்களில் விழாக்கோலம்
/
பக்தி மணம் கமழும் பங்குனி மாதம்; கோவில்களில் விழாக்கோலம்
பக்தி மணம் கமழும் பங்குனி மாதம்; கோவில்களில் விழாக்கோலம்
பக்தி மணம் கமழும் பங்குனி மாதம்; கோவில்களில் விழாக்கோலம்
ADDED : மார் 30, 2025 10:56 PM

மைதானம் மாரியம்மன் கோவில்நாளை கம்பம் நடும் விழா
மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவிலில், நாளை (1ம் தேதி) கம்பம் நடும் திருவிழா நடக்க உள்ளது.
மேட்டுப்பாளையம் நகரில், ஊட்டி சாலையில் உள்ள காந்தி மைதானத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட மிகவும் பழமையான மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குண்டம் மற்றும் தேர்த் திருவிழா, கடந்த 25ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது.
நாளை (ஏப்., 1) இரவு, 10:00 மணிக்கு கம்பம் நடும் விழா நடக்க உள்ளது. 3ம் தேதி கொடியேற்றமும், 7ம் தேதி இரவு குண்டம் திறப்பும் நடக்க உள்ளன. 8ம் தேதி காலை, 8:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் சுவாமி அழைப்பும், 8:30 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடக்க உள்ளது. 9ம் தேதி மாலை, 4:30 மணிக்கு அம்மன் சுவாமி தேரோட்டம் நடக்கிறது. 10ம் தேதி அம்மன் திருவீதி உலா நடக்க உள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பேபி ஷாலினி செய்து வருகிறார்.
காளியாதேவி கோவிலில் குண்டம் திருவிழா
மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட ஊமப்பாளையத்தில், குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. இக்கோவிலின், 37ம் ஆண்டு குண்டம் திருவிழா, கடந்த, 25ம் தேதி இரவு பூச்சாட்டுடன் துவங்கியது. நாளை (ஏப்., 1) ஆடு குண்டம் திறப்பும், ஒன்பதாம் தேதி காலை பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பும், அதைத் தொடர்ந்து குண்டம் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.
பின் அம்மனுக்கும், முனீஸ்வரருக்கும் அக்னி அபிஷேகம் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்துபக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. மாவிளக்கு பூஜையும், மஞ்சள் நீராட்டும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை தலைமை பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் ஆண்டு விழா
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளியங்கிரி ஆண்டவர், தேவி கருமாரியம்மன் ஆகிய சன்னதிகள் உள்ளன. வெள்ளியங்கிரி ஆண்டவர் 51வது ஆண்டு விழாவும், தேவி கருமாரியம்மன், 34வது ஆண்டு விழாவும், நாளை (ஏப்., 1) காலையில் கணபதி ஹோமம், இரவு பூச்சாட்டு மற்றும் அக்னி கம்பம் நடும் விழா நடைபெற உள்ளது.
ஒன்பதாம் தேதி மாவிளக்கு மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 13ம் தேதி நடூர் மாரியம்மன் கோவிலில் இருந்து திரிசூலம் எடுத்து வருதலும், இரவு சிவபெருமான் அழைப்பும் நடைபெற உள்ளது. 15ம் தேதி வெள்ளியங்கிரி மலைக்கு புறப்படுதலும் நடக்க உள்ளது.
விழா ஏற்பாடுகளை வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மதுர காளியம்மன் கோவிலில்விமானம் நிறுவும் வைபவம்
அன்னூர் அருகே லக்கேபாளையம் கோவில்பாளையத்தில், 300 ஆண்டுகள் பழமையான மதுர காளியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. முழுவதும் கருங்கற்களால் கர்ப்ப கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், சோபான மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.
இத்துடன் கருப்பராயன் மற்றும் கன்னிமாருக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. கோவிலில் மூன்று நிலை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உச்சியில் எட்டு டன் எடையுள்ள விமானம் நிறுவும் வைபவம் நேற்று நடந்தது. பொதுமக்கள் நெல், நவதானியங்கள் மற்றும் ஐம்பொன் ஆகியவற்றை அதில் வைத்து பூஜித்தனர். சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையடுத்து கிரேன் வாயிலாக, மூன்று நிலை கோபுரத்தின் உச்சியில் விமானம் நிறுவப்பட்டது. இதை தொடர்ந்து அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
திருச்சி, மணப்பாறையைச் சேர்ந்த ஸ்தபதி ராஜா, திருப்பணி குழுவினரால் கவுரவிக்கப்பட்டார். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.