/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புலிகள் பாதுகாப்புக்கான நிதியை பயன்படுத்த வேண்டும்; தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய பிரதிநிதி வலியுறுத்தல்

ADDED : ஜன 09, 2024 12:41 AM
கோவை;புலிகள் பாதுகாப்புக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை, மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டும் என, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய பிரதிநிதி ஹரிசங்கர் உபாத்யாய் கூறினார்.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில், நாட்டில் உள்ள புலிகள் சரணாலயத்தில், புலிகளின் பாதுகாப்பு குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆய்வு செய்யப்படும்.
இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில், இந்த ஆய்வை நடத்த ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்கள் ஹரிசங்கர் உபாத்யாய், அமிதாப் அக்னிஹோத்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் நேற்று, பாதுகாப்பு தணிக்கை ஆய்வை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, உலாத்தி, பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் ராமசுப்ரமணியத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் பகுதிக்கு சென்று, வனச்சரகர்கள், முன்கள வனப்பணியாளர்களை சந்தித்தனர்.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய பிரதிநிதி ஹரிசங்கர் உபாத்யாய் கூறுகையில், ''பாதுகாப்பு, பாதுகாப்பு அச்சுறுத்தல், பாதுகாப்பு குறித்த ரோந்து, புலிகளுக்கான கண்காணிப்பு அமைப்பு, சுற்றுசூழல் ஆகியவை குறித்து, ஆய்வு செய்யப்பட்டது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. புலிகளின் பாதுகாப்புக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை, பெரும்பாலான மாநில அரசுகள் புலிகள் காப்பகங்களுக்கு முறைப்படி வினியோகிப்பதில்லை.
அவ்வாறு வினியோகிக்கப்படாவிட்டால், அந்த நிதி மீண்டும் மத்திய அரசுக்கே சென்று விடும். எனவே, மாநில அரசுகள் அந்த நிதியை புலிகள் காப்பகங்களுக்கு ஒதுக்க வேண்டும்,'' என்றார்.
புலி தாக்கி இருவர் உயிரிழந்துள்ள சூழலில், நடந்த இந்த ஆய்வை வன ஆர்வலர்கள் முக்கியத்துவம் உள்ளதாக பார்க்கின்றனர்.