/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறந்தவெளி 'பார்' ஆனது பயணியர் நிழற்கூரை
/
திறந்தவெளி 'பார்' ஆனது பயணியர் நிழற்கூரை
ADDED : டிச 15, 2024 11:09 PM

வால்பாறை; வால்பாறையில், பயணியர் நிழற்கூரை திறந்தவெளி பாராக மாறியதால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
வால்பாறை அடுத்துள்ள, சோலையாறுடேமில் (ஆய்வு மாளிகை எதிரில்) நகராட்சி சார்பில் புதியதாக பயணியர் நிழற்கூரை கட்டப்பட்டது. இங்குள்ள, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் பெண்கள், நோயாளிகள், பயணியர் நிழற்கூரையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், சமீப காலமாக பயணியர் நிழற்கூரையில் பகல் நேரத்திலேயே, சமூக விரோதிகள் திறந்தவெளி பாராக மாற்றி வருகின்றனர். மது அருந்திய பின், காலி மது பாட்டில்களை அங்கேயே விட்டு செல்கின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: பாழடைந்த நிலையில் காணப்பட்ட பயணியர் நிழற்கூரை சமீபத்தில், நகராட்சி சார்பில் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நிழற்கூரையில் சமூக விரோதிகள் பகல் நேரத்திலேயே ஆக்கிரமித்து, திறந்தவெளி பாராக மாற்றி மது அருந்தி வருகின்றனர்.
இதனால், வயதானவர்கள், நோயாளிகள், சுற்றுலா பயணியர் உள்ளிட்ட யாரும் நிழற்கூரையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், மழை, வெயில் நேரங்களில் பல மணி நேரம் நடுரோட்டில் காத்திருந்து பஸ்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
விதிமுறையை மீறும் சமூக விரோதிகளை போலீசார் கண்டறிந்து, மது அருந்துபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.