/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக பல மடங்கு உயர்வு
/
உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக பல மடங்கு உயர்வு
உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக பல மடங்கு உயர்வு
உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக பல மடங்கு உயர்வு
ADDED : அக் 21, 2024 06:31 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில், உணவு தயாரிப்பு மூலப்பொருட்களின் விலை உயர்வை காரணம் காட்டி, சில ஓட்டல்களில், உணவு விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
கோவை மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், தென்மாவட்டங்களுக்கு, பொள்ளாச்சி மார்க்கமாகவே சென்று திரும்புகின்றனர். இதனால், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், சைவம், அசைவம் உணவகங்கள் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பல உணவகங்களில், மூலப்பொருட்களின் விலை உயர்வை காரணம் காட்டி, தாறுமாக விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். வாடிக்கையாளர்கள், முன்கூட்டியே விலையை அறிந்து கொள்ளும் வகையில் விலைப்பட்டியலும் கிடையாது.
மக்கள் கூறியதாவது:
பல உணவகங்களில், ஒரு இட்லி, 15 முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதேபோல, ஒரு சப்பாத்தி, 30 முதல் 40 ரூபாய். பார்சல் வாங்கினால் சாம்பார், சட்னிக்கு பிளாஸ்டிக் டப்பாவுக்கு, 10 ரூபாய் தனியாக கோரப்படுகிறது.
அளவு சாப்பாடு, 80 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அசைவ உணவகங்களில், சிறிய அளவிலான டப்பாவில் வழங்கப்படும் சிக்கன் குழம்பு, 250 முதல் 300 ரூபாய் வரையும், சிறிய மீன் துண்டு, 120 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது.
இதேபோல, மட்டன் பிரியாணி, கிலோ 350 முதல் 400, சிக்கன் பிரியாணி, கிலோ, 230 முதல், 250 ரூபாய் என, ஏரியாவுக்கு ஏற்ப விற்கப்படுகிறது. பல உணவகங்களில் விலைப்பட்டியல் வைக்கப்படுவதில்லை.
இதனால், வாடிக்கையாளர்கள் உணவு உட்கொண்ட பின், 'பில்' தொகையைப் பார்க்கும் போதே, அதிர்ச்சியை எதிர்கொள்கின்றனர். துறை ரீதியான அதிகாரிகள், விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.