காட்சிப்பொருளான சோதனை சாவடி மாவட்ட எல்லையில் சிக்கல்
காட்சிப்பொருளான சோதனை சாவடி மாவட்ட எல்லையில் சிக்கல்
ADDED : செப் 06, 2026 04:52 PM
உடுமலை: உடுமலை அருகே, மாவட்ட எல்லையில், காட்சிப்பொருளாக மாறியுள்ள சோதனை சாவடிக்கு, போலீசார் நியமித்து, குற்றத்தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
திருப்பூர்–கோவை மாவட்ட எல்லையில், உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட தேவனுார்புதுார் அமைந்துள்ளது. தளி போலீஸ் கட்டுப்பாட்டிலுள்ள இப்பகுதியை ஒட்டி, பல்வேறு நீராதாரங்கள், மலையடிவாரத்தில் அமைந்துள்ளன.
நீராதாரங்களில் இருந்து, கனிம வளங்கள் கடத்தலை தடுக்க தேவனுார்புதுாரில், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வந்தது.
இதையடுத்து, தற்காலிகமாக தேவனுார்புதுார் அருகே, ஆண்டியூர் பிரிவில், திருப்பூர்– கோவை மாவட்ட எல்லையில், போலீஸ் சோதனை சாவடி சில ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது.
உடுமலை – ஆனைமலை ரோட்டில் வாகனங்களை கண்காணிக்கவும், கனிம வள கடத்தலை தடுக்கவும், சோதனை சாவடியில் தளி போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பெருந்தொற்று பரவல் காலத்தில், ஊரடங்கு விதிமீறல் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்த சோதனை சாவடி பயன்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த சோதனை சாவடிக்கென நிரந்தர கட்டடமும் கட்டப்பட்டது. பின்னர், போலீசார் நியமிக்கப்படாமல், கட்டடமும் காட்சிப்பொருளாக பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
இதனால், இரவு நேரங்களில், கனிம வளம் கடத்தல் வாகனங்கள், தடையில்லாமல் அருகிலுள்ள மாவட்டத்துக்கு செல்லும் வாய்ப்புள்ளது. மேலும், குற்றத்தடுப்பு பணியில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே, போலீஸ் சோதனை சாவடி நிரந்தரமாக செயல்படும் வகையில், சுழற்சி முறையில் போலீசார் நியமிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
