/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெரும் எதிர்பார்ப்பை கூட்டிய காலிறுதி போட்டிகள்
/
பெரும் எதிர்பார்ப்பை கூட்டிய காலிறுதி போட்டிகள்
ADDED : நவ 26, 2024 11:18 PM
'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டியில் முக்கிய சுற்றான காலிறுதி போட்டிகள் இன்று நடைபெறும் நிலையில் 'டிராபி' வெல்லும் முனைப்புடன் வீரர்கள் களம் இறங்குகின்றனர்.
கோவை விழாவின், 17வது பதிப்பை முன்னிட்டு 'தினமலர்' நாளிதழ் மற்றும் 'லைகா கோவை கிங்ஸ்' சார்பில் 'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி கடந்த, 22ம் தேதி முதல் நடக்கிறது. 32 கல்லுாரி அணிகள் பங்கேற்ற இப்போட்டியானது காலிறுதியை நெருங்கியுள்ளது.
சி.ஐ.டி., கல்லுாரியில், நேற்று என்.ஜி.எம்., -ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி இடையேயான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த என்.ஜி.எம்., அணி, 20 ஓவரில், 2 விக்கெட்டுக்கு, 182 ரன்கள் எடுத்தது. ஈஸ்வர் அணி, 16.4 ஓவரில், 92 ரன்களுக்கு 'ஆல் அவுட்' ஆனது. என்.ஜி.எம்., வீரர் விக்னேஷ்வரிற்கு, ஸ்ரீ ஆனந்தாஸ் குழும இயக்குனர் வெங்கடேஷ் ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.
எஸ்.டி.சி.,-கிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி இடையேயான போட்டியில், 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 158 ரன்களை எஸ்.டி.சி., அணி முதலில் எடுத்தது. கிருஷ்ணா அணி, 8 விக்கெட்டுக்கு, 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. எஸ்.டி.சி., வீரர் அபிநந்திற்கு, எஸ்.பி.டி., மருத்துவமனை இருதவியல் நிபுணர் சுப்புராஜா, ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.
சங்கரா கல்லுாரியில், ராமகிருஷ்ணா கலை கல்லுாரி-பி.பி.ஜி., கல்லுாரி இடையேயான போட்டியில், 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 233 ரன்களை ராமகிருஷ்ணா அணி முதலில் குவித்தது. பி.பி.ஜி., அணியோ எட்டு விக்கெட்டுக்கு, 123 ரன்கள் மட்டும் எடுத்தது. ராமகிருஷ்ணா வீரர் சச்சினிற்கு, சங்கரா கல்லுாரி துணை முதல்வர் பெர்னார்டு எட்வர்டு ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.
ராமகிருஷ்ணா வித்யாலயா மாருதி கல்லுாரி-கொங்குநாடு கல்லுாரி இடையேயான போட்டி நடந்தது. மாருதி அணி, 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 188 ரன்கள் எடுத்தது. கொங்குநாடு அணி, 14 ஓவரில், 50 ரன்களுக்கு 'ஆல் அவுட்' ஆனது. மாருதி அணி வீரர் மோகன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ராமகிருஷ்ணா கல்லுாரியில், கே.பி.ஆர்., - சி.எம்.எஸ்., இடையே போட்டி நடந்தது. கே.பி.ஆர்., அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 212 ரன்கள் எடுத்தது. சி.எம்.எஸ்., அணியினர், 18.4 ஓவரில், 113 ரன்களுக்கு 'ஆல் அவுட்' ஆகினர். கே.பி.ஆர்., வீரர் அருண்குமாருக்கு, ராமகிருஷ்ணா கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் நித்தியானந்தன் ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.
பி.எஸ்.ஜி., - என்.ஜி.பி., இடையேயான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த என்.ஜி.பி., அணி, 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 132 ரன்கள் எடுத்தது. பி.எஸ்.ஜி., அணியோ, 18.2 ஓவரில், 5 விக்கெட்டுக்கு, 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வீரர் சித்தார்திற்கு 'லைகா கோவை கிங்ஸ்' உதவி பயிற்சியாளர் சுரேஷ் ஆட்ட நாயகன் விருது வழங்கினார். எஸ்.என்.எம்.வி., கல்லுாரியில், வி.எல்.பி., ஜானகியம்மாள் கல்லுாரி-ஜே.சி.டி., இடையே போட்டி நடந்தது. ஜே.சி.டி., அணி, 11.4 ஓவரில், 37 ரன்களுக்கு 'ஆல் அவுட்' ஆக, வி.எல்.பி., அணி, 3.1 ஓவரில், 40 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வீரர் கண்ணனுக்கு, எஸ்.என்.எம்.வி., கல்லுாரி பி.ஆர்.ஓ., முருகசாமி ஆட்ட நாயகன் விருது வழங்கினார். எஸ்.என்.எம்.வி., - கிருஷ்ணா கலைக் கல்லுாரி இடையேயான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த எஸ்.என்.எம்.வி., அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 133 ரன்கள் எடுத்தது. கிருஷ்ணா அணியோ, 88 ரன்களுக்கு 'ஆல் அவுட்' ஆனது. எஸ்.என்.எம்.வி., வீரர் விஷ்ணு தேவ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இணைந்த கரங்கள்
'தினமலர்' நாளிதழுடன் எஸ்.எஸ்.வி.எம்., நிறுவனங்கள், இந்துஸ்தான் நிறுவனங்கள், 'வால்ரஸ்' நிறுவனம், சுப்ரீம் மொபைல்ஸ் ஆகியன இணைந்து வழங்குகின்றன. வரும், 29ல் இறுதிப்போட்டி நடக்கும் நிலையில், முக்கிய சுற்றான இன்றைய காலிறுதி போட்டி எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
முத்தான பரிசுகள்!
வெற்றி பெறும் அணிகளுக்கு, முதல் நான்கு பரிசுகளாக, ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் டிராபி வழங்கப்படுகிறது. மூன்று சிறந்த பவுலர்கள் 'லைகா கோவை கிங்ஸ்' அணியால் 'நெட் பவுலர்'களாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.