/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருளில் தவிக்குது 'தெற்கு'; தீர்வு காணாத அதிகாரிகள் எதற்கு?
/
இருளில் தவிக்குது 'தெற்கு'; தீர்வு காணாத அதிகாரிகள் எதற்கு?
இருளில் தவிக்குது 'தெற்கு'; தீர்வு காணாத அதிகாரிகள் எதற்கு?
இருளில் தவிக்குது 'தெற்கு'; தீர்வு காணாத அதிகாரிகள் எதற்கு?
ADDED : நவ 12, 2024 05:52 AM

போத்தனூர் ; 'கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டல வார்டுகளில் தெருவிளக்குகள் கண்ணை மூடி பல நாட்களாகிறது. புகார் செய்தாலும் உடனடியாக சரிசெய்வதில்லை' என, பெண்கள் குமுறுகின்றனர்.
தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட, 94 முதல் 100 வரையிலான வார்டுகளில் பல ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். சமீபகாலமாக, ஏராளமான தெருக்களில் மின்விளக்குகள் பழுதாகி பல நாட்களாகிறது.
இதுதொடர்பாக, அதிகாரிகள், தெற்கு மண்டல தலைவர், கவுன்சிலர், அந்தந்த வார்டின் ஆளுங்கட்சி பொறுப்பாளர்கள் என, ஒவ்வொருவரிடமும் முறையிட்டும் தங்களது பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லையென, வார்டு மக்கள் குமுறுகின்றனர்.
இதுகுறித்து, 94வது வார்டு பெண்கள் சிலர் கூறுகையில், 'தெருவிளக்குகள் எரியாததால் எங்களால் இருளில் நடமாடவே முடிவதில்லை; குழந்தைகளை வீட்டருகிலுள்ள கடைகளுக்குகூட அனுப்ப முடிவதில்லை.
டூ வீலர், சைக்கிளில் சென்றால் நாய்கள் துரத்துகின்றன; சுற்றிவளைத்து கடிக்க பாய்கின்றன. ஒரு விதமான அச்சத்துடனேயே நடமாட வேண்டியுள்ளது.
வரிக்கு மேல் வரிப்போட்டு மக்களை வதைக்கும் மாநகராட்சி, தனது கடமையை ஒழுங்காக செய்ய வேண்டாமா? தெருவிளக்கு கான்ட்ராக்டர்கள் தரமற்ற பல்புகளை பொருத்துவதால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.
இப்பிரச்னைக்கு மாநகராட்சி கமிஷனர் தான் தீர்வு காண வேண்டும்,'' என்றனர்.
பொதுமக்களின் புகார் குறித்து தெற்கு மண்டல உதவி கமிஷனர் குமரனிடம் கேட்டபோது, ''நான் தற்போது தான் வந்துள்ளேன். சரி செய்ய சொல்கிறேன்,'' என்றார்.

