/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளம்பர பலகைகள் அகற்றும் பணி துவங்கியது! 'தினமலர்' செய்தி எதிரொலி
/
விளம்பர பலகைகள் அகற்றும் பணி துவங்கியது! 'தினமலர்' செய்தி எதிரொலி
விளம்பர பலகைகள் அகற்றும் பணி துவங்கியது! 'தினமலர்' செய்தி எதிரொலி
விளம்பர பலகைகள் அகற்றும் பணி துவங்கியது! 'தினமலர்' செய்தி எதிரொலி
ADDED : மார் 27, 2025 12:24 AM

கோவை: கோவையில், அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் மற்றும் இரும்பு சட்டங்களை அகற்றும் பணியை, மாநகராட்சி நேற்று துவக்கியது. நகரமைப்பு பிரிவினர் மெத்தனமாக இருப்பதால், இப்பொறுப்பு, மண்டல உதவி கமிஷனர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சாலை சந்திப்புகள், வளைவு பகுதிகள் மற்றும் விபத்து ஏற்படும் இடங்கள், மேம்பாலங்கள், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் இடங்களில் எக்காரணம் கொண்டும் விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது.
ஆனால், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், விதிமுறையை மீறி, சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அவற்றை நகரமைப்பு பிரிவினர் அகற்றாமல் வேடிக்கை பார்க்கின்றனர்.
சில இடங்களுக்கு நகரமைப்பு பிரிவினரே, விதிமுறைகளை மீறி, அனுமதி அளித்திருக்கின்றனர்.
இதுதொடர்பாக, நேற்றைய நமது நாளிதழில், படங்களுடன் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், நகரமைப்பு பிரிவினரிடம் விசாரணை நடத்தினார்.
அதற்கு, 'விளம்பர பலகைகள் வைப்பதற்கு மாநகராட்சியில் இருந்து அனுமதி தரப்பட்டு இருக்கிறது' என, நகரமைப்பு அலுவலர் குமார் பதிலளித்திருக்கிறார்.
உடனே, 'அனுமதி அளித்திருந்தால், அதற்குரிய எண்ணை விளம்பர பலகையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
அனுமதி எண் இல்லையெனில், அவை அனுமதியற்றவை என்றே அர்த்தம். அத்தகைய விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும். இரும்பு சட்டங்களோடு அகற்றி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என, கமிஷனர் அறிவுறுத்தினார்.
இவ்விஷயத்தில், நகரமைப்பு பிரிவினர் மெத்தனமாக செயல்படுவதால், அந்தந்த மண்டலங்களின் உதவி கமிஷனர்கள் கண்காணித்து, அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூடுதல் பொறுப்பு வழங்கியுள்ளார்.
இதையடுத்து, அனைத்து மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் நேற்று விளம்பர பலகைகளும், இரும்பு சட்டங்களும் அகற்றப்பட்டன.
கூட்ஸ் ஷெட் ரோட்டில் அவிநாசி ரோடு மேம்பாலத்துக்கு எதிரே இருந்த விளம்பர பலகைகள், குறிச்சி குளக்கரை, வேடபட்டியில் பொம்மனாம்பாளையம் ரோடு உள்ளிட்ட இடங்களில், ஒன்பது விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.