/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரமாண்டமாக உருவாகிறது அறிவுலகம் கோவையில் மற்றுமொரு புது அடையாளம் (படங்கள்/சிவா)
/
பிரமாண்டமாக உருவாகிறது அறிவுலகம் கோவையில் மற்றுமொரு புது அடையாளம் (படங்கள்/சிவா)
பிரமாண்டமாக உருவாகிறது அறிவுலகம் கோவையில் மற்றுமொரு புது அடையாளம் (படங்கள்/சிவா)
பிரமாண்டமாக உருவாகிறது அறிவுலகம் கோவையில் மற்றுமொரு புது அடையாளம் (படங்கள்/சிவா)
ADDED : டிச 26, 2025 05:08 AM

காந்திபுரம்: கோவை, காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் மிக பிரமாண்டமாக எட்டு தளங்களுடன் 'பெரியார் அறிவுலகம்' தமிழக பொதுப்பணித்துறையால் கட்டப்படுகிறது.
துவக்கத்தில் கலைஞர் நுாலகம் என்றழைக்கப்பட்டது; பின், பெரியார் நுாலகம் என பெயரிடப்பட்டது. நுாலகம் மற்றும் அறிவியல் மையங்கள் இணைந்திருப்பதால், அறிவுலகம் என மாற்றப்பட்டுள்ளது.
மத்திய சிறைக்கு சொந்தமான 6 ஏக்கர் 98 சென்ட் நிலத்தில், ஒரு லட்சத்து 98 ஆயிரம் சதுரடி பரப்பளவில் உருவாக்கப்படுகிறது.
விண்வெளி (ஸ்பேஸ்) பயணத்தை உணரும் வகையில் 'லிப்ட்' வசதி உருவாக்கப்படுகிறது. முதல் தளத்திலும் ஏழாவது தளத்திலும் அறிவியல் மையம் அமைக்கப்படுகிறது.
முதல் தளத்தை சுற்றிப்பார்த்து விட்டு, லிப்ட்டில் ஏழாவது தளத்துக்குச் செல்லும்போது, விண்வெளி பயணத்தை பார்வையாளர்கள் உணரலாம். இதற்காக, பொதுப்பணித்துறையினர் துபாய் சென்று, அங்குள்ள மியூசியத்தை பார்வையிட்டு, அங்குள்ள வசதியை கேட்டறிந்து, இங்கு ஏற்படுத்தி வருகின்றனர். விண்வெளியில் பயணிப்பதுபோல் அமையும் வகையில், லிப்ட் வடிவமைக்கப்படுகிறது.
மாணவர்களுக்காக ஒரு லட்சத்து 20 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட உள்ளன. 181 கார்கள், 451 இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்படுகிறது. பிரமாண்ட நுழைவாயில் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. நுழைவு படிக்கட்டுகள் கிரானைட் பணி மற்றும் இன்டீரியர் டெக்கரேஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
நான்கு தளங்கள் வரை முடிக்கப்பட்டு, இறுதிக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.அறிவுலகத்தின் முகப்பு பகுதியில் கண்ணாடி பொருத்தும் பணி துவக்கப்பட்டிருக்கிறது.
இயற்கை காற்று வரும் வகையில், முதல் தளத்தில் இருந்து ஏழாவது தளம் வரை சுமார் 100 அடி உயரத்துக்கு சுவர் எழுப்பாமல் இடைவெளி விடப்பட்டு, கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு உள்ளது.
அதாவது, ஏழாவது தளத்தில், 30 மீட்டர் நீளம், 24 அடி அகலம், 5 அடி உயரத்துக்கு கான்கிரீட் பீம் போடப்பட்டிருக்கிறது. சவாலான இப்பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மிகவும் சிரத்தை எடுத்து மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், '2026 ஜனவரியில் நுாலகம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதற்குள் பணிகளை முடிக்கும் வகையில் விரைவுபடுத்தி வருகிறோம். நுாலகம் மற்றும் அறிவியல் மையம் இணைந்திருப்பதால், 'பெரியார் அறிவுலகம்' என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
நுழைவாயிலை கடந்து உள்ளே செல்லும் வழியில் ஈ.வெ.ரா. உருவச்சிலை நிறுவப்படும்' என்றனர்.

