/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கெடு முடிந்தது; அதிரடி துவங்கியது! ஆக்கிரமிப்பு அகற்ற களமிறங்கியது நகராட்சி
/
கெடு முடிந்தது; அதிரடி துவங்கியது! ஆக்கிரமிப்பு அகற்ற களமிறங்கியது நகராட்சி
கெடு முடிந்தது; அதிரடி துவங்கியது! ஆக்கிரமிப்பு அகற்ற களமிறங்கியது நகராட்சி
கெடு முடிந்தது; அதிரடி துவங்கியது! ஆக்கிரமிப்பு அகற்ற களமிறங்கியது நகராட்சி
ADDED : அக் 17, 2024 10:16 PM

பொள்ளாச்சி : நகராட்சி விதித்த கெடு முடிவடைந்த நிலையில், மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மழைநீர் வடிகாலை ஆக்கிரமித்து சிலர் கட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளனர். கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள், மண் குவிந்து கிடப்பதால் மழை காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ரோட்டில் செல்கிறது.
மேலும், கால்வாய்களில் இருந்து எடுக்கப்படும் கழிவுகள், ரோட்டோரத்தில் அப்படியே குவித்து வைக்கப்படுவதால், சுகாதாரம் பாதிக்கிறது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைநீர் வடிகால் கால்வாய்களை உடனடியாக துார்வார நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதற்காக கடை உரிமையாளர்களுக்கு கூட்டம் நடத்தி, முக்கிய மழைநீர் வடிகால் கால்வாய்களை துார்வார முன்வர வேண்டும் என நகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.
கடந்த, 15ம் தேதி வரை காலக்கெடு கொடுத்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றி துார்வாரததால், நேற்று நியூஸ்கீம் ரோட்டில் மழைநீர் வடிகால் மீது இருந்த ஆக்கிரமிப்புகளை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக அகற்றி, துார்வாரும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:
வியாபாரிகள் கடைகளுக்கு முன்பாக உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்கள் மீது அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அவர்களாகவே அகற்றி, நகராட்சியின் துாய்மை பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இதற்கு, கடந்த, 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
அவ்வாறு அகற்றப்படாத பட்சத்தில் நகராட்சியால் அகற்றப்படுவதுடன், அதற்கான செலவினத்தொகை சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் வசூலிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
கெடு முடிவடைந்த நிலையில், நகராட்சி வாயிலாக மழைநீர் வடிகால் மேல் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு துார்வாரும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.வடிகால் மீது அமைக்கப்பட்ட தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றாதவர்கள், உடனடியாக அகற்றி மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளை சரி செய்ய நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கழிவுநீர் கால்வாய்களில் எக்காரணம் கொண்டும் கழிவுகளை கொட்டக்கூடாது. அவ்வாறு கொட்டுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மற்றும் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு, கூறினார்.