/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏரியாவில் பிரச்னைகள் நிறைய இருக்கு... நேருநகர் மக்கள் குமுறல்
/
ஏரியாவில் பிரச்னைகள் நிறைய இருக்கு... நேருநகர் மக்கள் குமுறல்
ஏரியாவில் பிரச்னைகள் நிறைய இருக்கு... நேருநகர் மக்கள் குமுறல்
ஏரியாவில் பிரச்னைகள் நிறைய இருக்கு... நேருநகர் மக்கள் குமுறல்
ADDED : பிப் 22, 2024 05:09 AM

பொள்ளாச்சி நகராட்சி தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த சியாமளா, 29வது வார்டு கவுன்சிலராக, தி.மு.க.,வை சேர்ந்த பாத்திமா ஆகியோர் உள்ளனர்.
நகராட்சி, 29வது வார்டுக்கு உட்பட்ட நேருநகரில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வசிக்கும் இப்பகுதியில் பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. இதை சரி செய்ய வேண்டிய கவுன்சிலரோ, வார்டுக்குள் எட்டி பார்ப்பதில்லை; பிரச்னைகளுக்கு தீர்வு காண அவருக்கு மனசும் இல்லை, என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
குடியிருப்பு பகுதி மக்கள் கூறியதாவது:
கடும் துர்நாற்றம்
நேருநகரில், சாக்கடை கால்வாய்களை துார்வாராததால் கழிவுநீர் தேங்குகிறது. கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி மையமாக மாறியுள்ளது. கொசுத்தொல்லையால் இரவு நேரங்களில் துாங்க முடியாமல் அவதிப்படுகிறோம்.
மேலும், தொற்று நோய்கள் பரவுகின்றன. இதனால், நாங்களே சாக்கடையை துார்வார வேண்டியதுள்ளது. மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து வழிந்தோடுவதால் அதை கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
உப்பு நீர் குழாயில் கசிவு ஏற்படுகிறது. இதை சீரமைக்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்த சாக்கடை கால்வாய் அருகே குடிநீர் குழாய் அமைந்துள்ளது. கடும் துர்நாற்றத்தை சகித்துக்கொண்டு குழாயில் குடிநீர் பிடிக்கும் நிலை உள்ளது.
குடிநீரில் கழிவுநீர்
சாக்கடை கால்வாய் அருகே குடிநீர் குழாய் அமைந்துள்ளதால், அவ்வப்போது குடிநீரில் கழிவுநீரும் கலந்து புழுக்களுடன் வருகிறது. குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மேலும், குடிநீர் எப்போது வரும் என்பதே தெரியவில்லை. பெரும்பாலான நாட்களில் இரவு நேரங்களில் குடிநீர் வினியோகம் செய்வதால், மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்த்து, குடிநீர் வினியோக நேரத்தை அறிவிக்க வேண்டும்.
தெருவிளக்குகள் பகல் நேரத்தில் எரிகின்றன, சில நேரங்களில், இரவில் தெருவிளக்குகள் எரிவதில்லை.இதனால், இரவு நேரங்களில் குடிநீர் வினியோகித்தால் இருளில் குடிநீர் பிடிக்க அச்சத்துடன் செல்லும் சூழல் உள்ளது.
கவுன்சிலர் எங்கே!
முட்புதர்கள் அதிகளவு வளர்ந்து விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. செப்டிக் டேங்க் துார்வார பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுவரை சரி செய்யவில்லை. வீடு வீடாக குப்பை வாங்கப்படும் என்றார்கள். ஆனால், குப்பைகள் வாங்க யாரும் வருவதில்லை.
அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்க வேண்டுமென கேட்கிறோம். அதற்கும் நடவடிக்கை இல்லை என்பது தான் வருத்தமாக உள்ளது.
இங்குள்ள பிரச்னைகளை தெரிவிக்க, கவுன்சிலருக்கு போன் செய்தால், அவர் போனை எடுப்பதில்லை. இந்த பகுதிக்கு, மருத்துவ முகாம் நடத்த தகவல் தெரிவிப்பதற்கும், கோலப்போட்டி நடத்தும் போது வந்தார்.அதன்பின், ஏதாவது விழாக்கள் என்றால் மட்டுமே வார்டுக்குள் வந்து செல்கிறார். வார்டுக்கு யாராவது வருகிறார் என்றால், நாற்றம் அடிக்காமல் இருக்க, மருந்து 'ஸ்பிரே' செய்து சமாளிக்கின்றனர்.
அது வேற வாய்!
பிரச்னைகளை தீர்க்க பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க என கேட்டு வந்தாங்க. தேர்தலில் ஜெயித்ததும், பிரச்னைகளே இல்லாத பகுதியாக இப்பகுதியை மாற்றி விடுவேன் என்றார்.
இப்ப இந்த பகுதிக்கே வருவதில்லை. ஓட்டு கேட்கறப்ப வீடு, வீடாக வந்தாங்க; இப்போ எங்களது பிரச்னைகளை கேட்க கூட அவங்களுக்கு நேரமில்லை.
கவுன்சிலரை சந்திக்க கூட முடிவதில்லை. அரசியல் கட்சி கூட்டங்களுக்கு அழைத்துச் செல்பவர்கள் கூட அதன்பின் வருவதில்லை.
இங்கு பிரச்னைகள் ஏராளமாக இருக்கிறது; இதை தீர்க்க நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மக்கள் ஆதங்கம்
நகராட்சி, 29வது வார்டில் நேரு நகரில் மட்டுமே இவ்வளவு பிரச்னைகள் உள்ளன. மற்ற பகுதியிலும் இதுபோன்று பிரச்னைகள் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
நகராட்சி தலைவருடன் நிழலாக வலம் வரக்கூடிய கவுன்சிலர், அவ்வப்போது வார்டு தேவைகள், பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்திருந்தால் மக்கள் நிம்மதியடைந்திருப்பார்கள். கவுன்சிலர் வார்டுக்கு எப்போதாவது ஒரு முறை வந்தால், அவருக்கு பிரச்னைகள் எப்படி தெரியும் என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர். இதையெல்லாம், கவுன்சிலர் உணர்ந்தால், வார்டுக்குள் மதிப்பு கிடைக்கும். இல்லாவிட்டால், வரும் லோக்சபா தேர்தலில் சாயம் வெளுத்து விடும்.