/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழியெங்கும் பள்ளம்; கழன்றிடும் கபாலம்!
/
வழியெங்கும் பள்ளம்; கழன்றிடும் கபாலம்!
ADDED : ஜூலை 09, 2025 10:01 PM

போக்குவரத்து வசதிக்காகவும், வாகன பெருக்கத்துக்கு ஏற்பவும், இருவழிச்சாலைகள், நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்படுகின்றன. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை வாயிலாக ரோடுகள் பராமரிக்கப்படுகின்றன. மேலும், நகராட்சி, ஊராட்சி ஒன்றியம் வாயிலாகவும், ரோடுகள் பராமரிக்கப்படுகின்றன.
அதில், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில், அதிகளவு வாகன போக்குவரத்து உள்ளது. இந்த சாலைகள் பராமரிப்பின்றி உள்ளதால், விபத்து ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
தேசிய, மாநில நெடுஞ்சாலையில், பொள்ளாச்சி நகரில் பல்லடம், பாலக்காடு, மீன்கரை, ஆனைமலை ரோடுகள் ஒவ்வொரு பகுதியாக விரிவுபடுத்தப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் குறிப்பிட்ட துாரம் மட்டும் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பொள்ளாச்சி நகரில், மகாலிங்கபுரம் ஐந்து ரோடு சந்திப்பு பகுதியில், ரோடு மோசமாக உள்ளதால் விபத்துகள் ஏற்படுகிறது. அதே பகுதியில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். மீன்கரை ரோட்டில், சீனிவாசபுரம் பாலம் பராமரிப்பின்றி குண்டும், குழியாக இருப்பதால் தினமும் விபத்து ஏற்படுகிறது.
பொள்ளாச்சி - உடுமலை ரோடு விரிவாக்கம் செய்தாலும், விபத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை. நடைபாதை ஆக்கிரமிப்பு, குறுகலான சர்வீஸ் ரோடு என பல பிரச்னைகளால் மக்கள் மட்டுமின்றி, அவ்வழியாக பயணிப்போரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இந்த ரோட்டை புதுப்பிக்க வேண்டும். சர்வீஸ் ரோடு குறுகலாக இருப்பதால், மையத்தடுப்பு இரும்பு கம்பிகளை அகற்ற வேண்டும். பஸ் ஸ்டாப் பகுதிகளில் நிழற்கூரை அமைத்து 'பஸ்பே' மற்றும் தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
இதற்காக, எம்.பி., மற்றும் அதிகாரிகள் பல முறை ஆய்வு செய்தனர். ஆனால், பிரச்னை தீர்ந்த பாடில்லை.
தற்போது, உடுமலை ரோடு ஊஞ்சவேலாம்பட்டி முதல், கோவை ரோடு ஆச்சிபட்டி வரை, தேசிய நெடுஞ்சாலை முழுக்க படுமோசமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
மழை காலங்களில் மழைநீர் தேங்கி, குழிகள் இருப்பது தெரியாமல் வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர். இந்த தேசிய நெடுஞ்சாலை, அதிகாரிகளின் பாராமுகத்தால் பரிதாப நிலையில் உள்ளது.
வால்பாறை
வால்பாறையில் இருந்து, பொள்ளாச்சி செல்லும் ரோட்டின் ஓரத்தில் வளர்ந்துள்ள செடிகள் வெட்டப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். கருமலை, ரொட்டிக்கடை, ஸ்டேன்மோர் பகுதியில் குறுகலான பாலத்தை விரிவுபடுத்தாமல் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் ரோடு மிகவும் மோசமாக உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
கிணத்துக்கடவு
இன்றளவும் முறையான ரோடு வசதி இல்லாத கிராமங்கள் கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் உள்ளன. கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், தாலுகா அலுவலகம் அருகே குழி ஏற்பட்டுள்ளது.
காட்டம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி செல்லும் வழியில், குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடு முறையாக சீரமைக்காததால், சேறும் சகதியாக உள்ளது.
தாமரைக்குளம் ரயில்வே கேட் வேகத்தடை அருகே, பள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர். இதே போன்று, நல்லட்டிபாளையம், இம்மிடிப்பாளையம் ரோடுகள் பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது.
கோதவாடி, சென்றாம்பாளையம், நெ.10 முத்தூர் செல்லும் ரோடுகள் ஒரு வழிப்பாதை போன்று குறுகலாக உள்ளதால், விரிவுபடுத்த வேண்டும்.
- நிருபர் குழு -