ADDED : செப் 21, 2026 04:17 AM

பு ரட்டாசி வந்தாலே சிலர் கவலைப்படும் விஷயம் அசைவம் சாப்பிட முடியாதா என்பது தான். அவர்களின் கவலையை போக்க இதோ வந்தாச்சு, அசைவ சுவையில் சைவ உணவு!
சைவ பிஷ் ப்ரை வாழைக்காயை மீன் துண்டு போல வெட்டி, மிளகாய்த்தூள், மஞ்சள், மிளகு, தனியாத்தூள், இஞ்சி-பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, அரிசி மாவு, சோள மாவு, உப்பு சேர்த்து தயாரித்த மசாலாவில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். தவாவில் எண்ணெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக வறுத்தால் வெஜ் பிஷ் ப்ரை தயார்.
பலாக்காய் மட்டன்பிரியாணி பலாக்காயை உப்பு, மஞ்சள் சேர்த்து வேகவைத்து வடிக்கவும். எண்ணெய், நெய்யில் வாசனைப் பொருட்கள், வெங்காயம், இஞ்சி-பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி வதக்கி மசாலா சேர்க்கவும். பலாக்காய், தயிர், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். ஊறவைத்த பாஸ்மதி அரிசி, தண்ணீர் சேர்த்து 90 சதவீதம் வேகவைத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்து 10-15 நிமிடங்கள் தம் வைக்கவும்.
சைவ லெக் பீஸ் சோயாவை ஊறவைத்து அரைத்து, வேகவைத்த உருளைக்கிழங்கு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய், மல்லி, கரம் மசாலா, உப்பு, சோள மாவுடன் பிசையவும். ஐஸ்கிரீம் குச்சியில் லெக் பீஸ் வடிவம் செய்து, சோளமாவு கரைசலில் முக்கி, பிரெட் கிரம்ஸில் புரட்டவும். அரை மணி நேரம் வைத்து எண்ணெயில் பொரித்தால் முடிந்தது.
சைவ மட்டன் குழம்பு மல்லி, சீரகம், மிளகு, வரமிளகாய் வறுத்து அரைக்கவும். நல்லெண்ணெயில் சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, பட்டை, சோம்பு, தக்காளி, தேங்காய் வதக்கி அரைக்கவும். பின்னர் எண்ணெயில் சின்ன வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கறிபெலாக்காய் சேர்த்து வதக்கி அரைத்த மசாலா, தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டால், கமகமக்கும் சைவ மட்டன் குழம்பு.
- மதுஸ்ரீ
