/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.ஐ.ஆர். விண்ணப்பத்தில் குளறுபடி ஏதுமில்லை :கோவையில் அமைச்சர் நேரு பேட்டி
/
எஸ்.ஐ.ஆர். விண்ணப்பத்தில் குளறுபடி ஏதுமில்லை :கோவையில் அமைச்சர் நேரு பேட்டி
எஸ்.ஐ.ஆர். விண்ணப்பத்தில் குளறுபடி ஏதுமில்லை :கோவையில் அமைச்சர் நேரு பேட்டி
எஸ்.ஐ.ஆர். விண்ணப்பத்தில் குளறுபடி ஏதுமில்லை :கோவையில் அமைச்சர் நேரு பேட்டி
ADDED : நவ 16, 2025 01:05 AM
கோவை: ''எஸ்.ஐ.ஆர். விண்ணப்பத்தில் குளறுபடி ஏதுமில்லை ,'' என, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறினார்.
கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
துாய்மை தொழிலாளர்களின் கோரிக்கைகளை, தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டப்படுகிறதே?
அவர்களுக்காக, 6 நலத்திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். துாய்மை பணி தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. அதை மாற்ற தேசிய அளவில் முடிவெடுக்க வேண்டியுள்ளது. அதற்கு பேசிக் கொண்டிருக்கிறோம்.
பீகாரைத் தொடர்ந்து தமிழகத்திலும் வெற்றி பெறுவோம் என்று பா.ஜ., கூறியுள்ளதே?
வேறென்ன சொல்வார்கள். தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் வெற்றி பெற மாட்டோம் என கூறுவார்களா? ஆனால், தமிழகத்தில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.
எஸ்.ஐ.ஆர். பணியால் யாருமே ஓட்டுப்போட முடியாத நிலை வரும் என்று விஜய் வீடியோ வெளியிட்டுள்ளாரே?
இவ்வளவு பெரிய அரசு உள்ளது. ஒவ்வொரு பூத்திற்கும் ஒரு பி.எல்.ஓ., வீதம் 68 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டு, தி.மு.க., மூலம் ஒவ்வொரு பூத்திற்கும் ஒரு ஆள் போட்டுள்ளோம். 90 சதவீத விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு விட்டன. முதல்வரே நேரடியாக கலெக்டர்களிடம் பேசி, விண்ணப்பங்களை விரைவில் திரும்ப பெற கூறியுள்ளார். அவர்கள் திரும்ப பெறுகிறார்கள்.
எஸ்.ஐ.ஆர். விண்ணப்பத்தில், குளறுபடி இருப்பதாக கூறுகிறார்களே?
என்ன குளறுபடி என கூறுங்கள். 2002ல் வாக்காளர் பட்டியலில் குடும்பத்தில் ஒருவர் இருந்தாலே, அந்தகுடும்பத்தில் உள்ள அனைவரும் தவறில்லாமல் எழுதிக்கொடுத்து, போட்டோ ஒட்டிக் கொடுத்து சேர்ந்து கொள்ளலாம். அதிகாரிகளும் உதவுகிறார்கள். கட்சியினரும் உதவுகிறார்கள்.
புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைபவர்கள் படிவம் 6 கொடுக்கலாம். இந்த பணி முடிந்து 30 தினங்கள் சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்படும். தகுதியுள்ளவர்களை சேர்க்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தி.மு.க.,வினரும் அப்பணியை மேற்கொள்கின்றனர்.
தி.மு.க.,வினரே விண்ணப்பங்களை வாங்கிக் கொள்கின்றனர் என, அ.தி.மு.க., குற்றம் சுமத்துகிறதே?
விண்ணப்பங்களை எங்களிடம் எப்படி கொடுப்பார்கள்? பி.எல். ஓ. வீட்டுக்குச் சென்று தான் கொடுக்கிறார்கள். கொடுத்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய, வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் அனுமதியுடன் உதவுகிறோம். இப்பணிக்கு அ.தி.மு.க., ஒருத்தரையும் நியமிக்காமல் எங்களை குறை கூறிக் கொண்டிருந்தால் எப்படி? ஒரு நாளைக்கு 50 பேர் இணைக்க, பி.எல்.ஓ.வுடன் செல்ல தேர்தல் ஆணையம் சட்டப்படி அனுமதி கொடுத்துள்ளது. முதல் ஓரிரு நாட்கள் விண்ணப்பம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இப்பணி தொய்வில்லாமல் நடக்க, அனைத்து கலெக்டர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வடமாநில தொழிலாளர்கள் சேர்க்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளதே?
ஒரு இடத்தில் மொத்தமாக 100 பேரை சேர்த்தால், எதிர்ப்பு கடிதம் கொடுக்க கூறப்பட்டுள்ளது. சேர்ப்பது பிரச்னையில்லை. அவர்கள் அதேயிடத்தில் நிரந்தரமாக வசித்து வருவதற்கான சான்றிதழை அதிகாரிகளிடம் கொடுத்திருந்தால் மட்டுமே சேர்க்க வேண்டும்.
திருப்பதி கோயிலுக்கு நன்கொடை கொடுத்துள்ளீர்களே?
என்னிடம் அவ்வளவு பணம் ஏது? உறவினர்கள் கொடுத்துள்ளனர். அவர்கள் வியாபாரம் செய்கின்றனர். என் பெயரில் கொடுத்துள்ளனர். எனக்குத் தெரிந்திருந்தால் வேண்டாம் என்றிருப்பேன். எங்கள் ஊர் நிருபர்களில், தோழமையுடன் பழகும் நபர் கேட்டதால், ஏன் நான் கொடுக்கக்கூடாதா என்று கேட்டேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
'சின்னவேடம்பட்டிக்கு
மாற்றுத்திட்டம்'
அமைச்சர் நேரு மேலும் கூறுகையில், ''சின்னவேடம்பட்டியில் நல்ல நீரை தேக்குவதற்கான நடவடிக்கையை, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி எடுத்து வருகிறார். முதல்வரிடம் பேசி, மாற்று ஏற்பாடு செய்யப்படும். குப்பையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் சென்னையில் துவங்கப்பட்டது. இது, 25 ஆண்டு கால திட்டம். கோவை, மதுரையில் விரைவில் ஆரம்பிக்கப்படும்,'' என்றார்.

