/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
என்.ஜி.ஜி.ஓ., காலனியில் ரயில்வே மேம்பாலம் கட்ட அறிகுறியே இல்லை! போக்குவரத்து நெருக்கடியால் விபத்து ஏற்படும் அபாயம்
/
என்.ஜி.ஜி.ஓ., காலனியில் ரயில்வே மேம்பாலம் கட்ட அறிகுறியே இல்லை! போக்குவரத்து நெருக்கடியால் விபத்து ஏற்படும் அபாயம்
என்.ஜி.ஜி.ஓ., காலனியில் ரயில்வே மேம்பாலம் கட்ட அறிகுறியே இல்லை! போக்குவரத்து நெருக்கடியால் விபத்து ஏற்படும் அபாயம்
என்.ஜி.ஜி.ஓ., காலனியில் ரயில்வே மேம்பாலம் கட்ட அறிகுறியே இல்லை! போக்குவரத்து நெருக்கடியால் விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : செப் 12, 2024 11:44 PM

பெ.நா.பாளையம் : கடந்த எட்டு மாதங்களுக்கு முன் துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனி லெவல் கிராசிங்கில் பாலம் கட்ட பணிகள் துவக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது வரை பாலம் கட்டுவதற்கான அறிகுறியே தெரியவில்லை.
கோவை வடக்கு புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க சாலையை அகலப்படுத்துதல், மண் சாலையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விபத்துக்கள்
ஆனாலும், மேம்பால வசதி மற்றும் ரயில்வே மேம்பாலம் ஆகியவை இல்லாததால் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை. அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன.
கோவை துடியலூர் அடுத்த புறநகர் பகுதியான அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஜி.ஓ., காலனி பகுதியில் இருந்து இடிகரை செல்லும் வழியில் ரயில்வே கிராசிங் உள்ளது.
இதை கடந்துதான் இடிகரை, செங்காளி பாளையம், வட்டமலைபாளையம், அத்திப்பாளையம், வையம்பாளையம், கோவில் பாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள ஏராளமான குடியிருப்புகள், கிராமங்களுக்கு செல்ல வேண்டும். மேலும், கோவில்பாளையம் சத்தி ரோடு உடன் இணைந்து அன்னூர், அவினாசி, கோபி, சத்தியமங்கலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும்.
இதனால் கோவை நகருக்குள் செல்ல விரும்பாத லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இப்பாதையை இரவு நேரங்களில் அதிகமாக பயன்படுத்துகின்றனர். பகல் நேரங்களில், குறிப்பாக, பள்ளி, கல்லூரி வாகனங்கள், கோவை நகருக்கு பணி நிமித்தமாக செல்பவர்கள் ரயில்வே கிராசிங்கை கடந்து செல்கின்றனர்.
கோவை-மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் பாசஞ்சர் ரயில் இந்த ரயில்வே கிராசிங்கை நாள் ஒன்றுக்கு,10 முறை கடந்து செல்கிறது. இதனால் அவ்வப்போது ரயில்வே கேட் மூடப்பட்டு, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுமானத்தை விரைவில் துவக்கி, இங்கு நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என, பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
விரைவில் டெண்டர்
இதையடுத்து கடந்த ஜன., 30ம் தேதி ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி வளாகத்தில் அசோகபுரம் ஊராட்சி தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம், துடியலூர் போலீசார், போக்குவரத்து துறை, ரயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டு கூட்டம் நடந்தது.
அதில், ரயில்வே கட்டுமான பணி நடக்கும் போது மாற்று பாதை குறித்து, உரிய அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.
ஆனால், கடந்த, 8 மாதங்களாக என்.ஜி.ஜி.ஓ., காலனி ரயில்வே கிராசிங்கில் ரயில்வே பாலம் கட்டுவதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை.
இது குறித்து, அசோகபுரம் ஊராட்சி துணை தலைவர் சண்முகம் கூறுகையில்,ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான டெண்டர் முடிந்துவிட்டது. ரயில்வே பாலத்தை ஒட்டி இரண்டு பக்கங்களிலும் பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை துறை டெண்டர் விட்டு பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளன.
இம்மாத இறுதியில் அல்லது அக்., முதல் வாரத்தில் ரயில்வே துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணியின் போது, வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துடியலூர் போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தினார் என்றார்.