/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்ஜெட் அறிவிப்பில் எதுவும் இல்லை; அன்னுார் மக்கள் அதிருப்தி
/
பட்ஜெட் அறிவிப்பில் எதுவும் இல்லை; அன்னுார் மக்கள் அதிருப்தி
பட்ஜெட் அறிவிப்பில் எதுவும் இல்லை; அன்னுார் மக்கள் அதிருப்தி
பட்ஜெட் அறிவிப்பில் எதுவும் இல்லை; அன்னுார் மக்கள் அதிருப்தி
ADDED : மார் 17, 2025 12:23 AM
அன்னுார்; தமிழக அரசின் பொது பட்ஜெட், கடந்த 14ம் தேதியும், வேளாண் பட்ஜெட் 15ம் தேதியும் சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான கோரிக்கைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என அன்னுார் தாலுகா மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அன்னூர் தாலுகா மக்கள் கூறியதாவது:
அத்திக்கடவு இரண்டாவது திட்டத்திற்கு ஆய்வு முடிக்கப்பட்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகளால் அரசுக்கு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு இத்திட்டம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. 70 சதவீதம் குளம், குட்டைகள் அத்திக்கடவு முதல் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
அன்னூரில் ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஆனால் வெறும் 58 படுக்கைகள் மட்டுமே அரசு மருத்துவமனையில் உள்ளன. நூறு படுக்கைகள் கொண்டதாக தரம் உயர்த்துவது குறித்தும் அறிவிப்பு வெளியாகவில்லை.
செல்லப்பம்பாளையம், கஞ்சப்பள்ளி, எல்லப்பாளையம் ஆகிய நடுநிலைப் பள்ளிகளில் தலா 250 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளியாகவும், பொன்னே கவுண்டன்புதுார் மற்றும் பசூர் உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்த பல ஆண்டுகளாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். ஆனால் அரசு தரம் உயர்த்துவதாக அறிவித்த பட்டியலில் அன்னுார் தாலுகாவில் ஒரு பள்ளி கூட இடம்பெறவில்லை.
தேர்தல் அறிக்கையில் கரும்புக்கு ஒரு டன்னுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என தி.மு.க., தெரிவித்திருந்தது. வெட்டுக் கூலி உயர்ந்துள்ளது. விதை கரும்பு, உரம், பூச்சி மருந்து என அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. இதனால் 3,100 ரூபாய் கட்டுபடியாகாது. ஆனால் கரும்பு விவசாயிகள் குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
பயிர்களை அழிக்கும் வனவிலங்குகளை தடுப்பது குறித்து விரிவான செயல் திட்டம் அறிவிக்கப்படவில்லை. விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து பல ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். விவசாயி மின் இணைப்பு கூடுதலாக விரைவாக வழங்குவதற்கான அறிவிப்பு இல்லை.
அன்னூர் தாலுகாவில் கிளை நூலகத்தை தாலுகா நூலகமாக தரம் உயர்த்துவது, ஊர் புற நூலகங்களை கிளை நூலகங்களாக தரம் உயர்த்துவது, கோர்ட், தீயணைப்பு நிலையம் ஆகியவற்றுக்கு சொந்த கட்டிடம் கட்டுவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு அன்னூர் மக்கள் தெரிவித்தனர்.