/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுக்குள் யானை இருக்கு ;விறகு தேட போகாதீங்க!
/
காட்டுக்குள் யானை இருக்கு ;விறகு தேட போகாதீங்க!
ADDED : செப் 10, 2025 09:50 PM
வால்பாறை,; எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், தொழிலாளர்கள் விறகு தேட செல்ல வேண்டாம், என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. பருவமழைக்கு பின் வனவளம் செழுமையாக இருப்பதால், மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய இரு வனச்சரகங்களிலும் நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக பல்வேறு எஸ்டேட்களில் முகாமிட்டுள்ளன. குறிப்பாக, இஞ்சிப்பாறை, கெஜமுடி, சோலையாறு, பன்னிமேடு உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பருவமழைக்கு பின் வால்பாறையில் பசுமை திரும்பியுள்ளதால், யானைகள் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டுள்ளன. யானைகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் போதிய அளவு கிடைப்பதால், யானைகள் நிரந்தரமாக இங்கேயே முகாமிட்டுள்ளன.
வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், தொழிலாளர்கள் வனப்பகுதியில் விறகு தேட செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.