/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆதி மனிதன் வாழ்ந்த காலத்துக்கு அழைத்துச்செல்லும் புத்தகம் இது!'
/
'ஆதி மனிதன் வாழ்ந்த காலத்துக்கு அழைத்துச்செல்லும் புத்தகம் இது!'
'ஆதி மனிதன் வாழ்ந்த காலத்துக்கு அழைத்துச்செல்லும் புத்தகம் இது!'
'ஆதி மனிதன் வாழ்ந்த காலத்துக்கு அழைத்துச்செல்லும் புத்தகம் இது!'
ADDED : ஜூன் 29, 2025 12:45 AM

வாசிப்பை நேசிக்கும் பலர், தற்போது தாங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம், ஆங்கில எழுத்தாளர் யுவால் நோவா ஹராரி எழுதிய, 'சேபியன்ஸ்(Sapiens) என்ற புத்தகம் குறித்து, விஸ்வாஸ் பேப்பர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் மணியன் சொல்கிறார்.
தமிழில் மானுடவியல் ஆய்வுகள் பற்றி, குறைவான புத்தகங்களே வெளி வந்துள்ளன. இதில் சேபியன்ஸ் (Sapiens: A Brief History of Humankind) என்ற இந்த நுால், மிக விரிவான தரவுகளுடன், 20 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் நாகலட்சுமி சண்முகம், தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இந்த நுாலின் ஆசிரியர், இந்த நுாலை நான்கு பகுதிகளாக பிரித்துக் கொண்டு, மனித இனம் தோன்றிய வரலாறு மற்றும் அதன் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்திருக்கிறார். ஒரே வகை மனிதன் மட்டுமின்றி, பல வகையான மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். இதில் மற்ற இனங்கள் அழிந்து, ஹோமோ சேபியன்கள் மட்டும் எப்படி தொடர்ந்து உயிர் வாழ்ந்தனர் என்பதை இந்த நுால் விளக்குகிறது.
மனிதனின் அறிவு புரட்சி, வேளாண் புரட்சி, அறிவியல் புரட்சி என, இன்றைய 'ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்' தொழில்நுட்பம் வரை, இந்த நுாலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்த அறிவியல் தொழில்நுட்ப உலகம் எங்கு போய் நிற்கும், நாம் யார், நாம் எதை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறோம் என்ற கேள்விகளுக்கு, இந்த நுாலில் விடை கிடைக்கிறது.
பொதுவாக நாம் இதுவரை படித்து அறிந்து கொண்ட வரலாறு என்பது, நாடு நகரங்கள் தோன்றிய பின், மன்னர்கள் ஆட்சி அதிகாரங்கள் பற்றியதாக மட்டுமே உள்ளது.
அதற்கு முன், மனித குலத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றி அறிவியல் பூர்வமாக ஆராயப்பட்ட நுால்கள் எழுதப்படவில்லை. அப்படியே எழுதப்பட்டு இருந்தாலும், அது மக்களின் வாசிப்புக்கு வரவில்லை.
பிறப்பில் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி கூறும் போது, விலங்குகள் கர்ப்பத்தில் முழு வளர்ச்சி அடைந்த பிறகு பிறக்கின்றன. அதன் பிறகு உடல் மட்டும் வளர்கிறது. மனிதன் கர்ப்பத்தில் இருந்து முழு வளர்ச்சியுடன் பிறப்பதில்லை.
பிறந்த பிறகுதான் உடலும், அறிவும் வளர்கிறது. மனிதர்களின் பசியும், உணவுத் தேடலும் மற்ற உயிரினங்களில் இருந்து மாறுபடுகின்றன.
உணவுக்காக இடம் பெயர்ந்து, சமவெளிக்கு வரும் போது ஒரு நிரந்த வாழ்விடத்தை அமைத்துக் கொள்கிறான். அங்கிருந்து வேளாண் உற்பத்தியும், மனித சமுதாயமும் உருவாகிறது என, மிக தெளிவாக, மனித குல வரலாற்றை, பல ஆதாரங்களுடன் நுாலாசிரியர் இந்த நுாலில் எழுதி இருக்கிறார்.
மனிதன் கடந்து வந்த பாதையும், பயணமும் மிக நீண்டது, அந்த பயணத்தின் இறுதி எல்லை எதுவென்று, இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று, நுாலாசிரியர் நுாலை முடித்து இருக்கிறார்.
இந்த நுாலை வாசித்து முடித்த போது, ஆதி மனிதன் தோன்றிய காலத்துக்கு, பின்னோக்கி பயணித்து வந்த அனுபவம் கிடைக்கிறது.
இந்த அறிவியல் தொழில்நுட்ப உலகம் எங்கு போய் நிற்கும், நாம் யார், நாம் எதை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறோம் என்ற கேள்விகளுக்கு, இந்த நுாலில் விடை கிடைக்கிறது.
மனிதன் கடந்து வந்த பாதையும், பயணமும் மிக நீண்டது, அந்த பயணத்தின் எல்லை எதுவென்று, இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று, நுாலாசிரியர் நுாலை முடித்து இருக்கிறார்.