/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலி மனை இடத்தில் புதரால் அச்சுறுத்தல்; உரிமையாளருக்கு அபராதம் விதிக்க கோரிக்கை
/
காலி மனை இடத்தில் புதரால் அச்சுறுத்தல்; உரிமையாளருக்கு அபராதம் விதிக்க கோரிக்கை
காலி மனை இடத்தில் புதரால் அச்சுறுத்தல்; உரிமையாளருக்கு அபராதம் விதிக்க கோரிக்கை
காலி மனை இடத்தில் புதரால் அச்சுறுத்தல்; உரிமையாளருக்கு அபராதம் விதிக்க கோரிக்கை
ADDED : டிச 10, 2024 11:31 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பேரூராட்சி மற்றும் பிற கிராம ஊராட்சிகளில், குடியிருப்பு பகுதி அருகே உள்ள செடிகளை அகற்றம் செய்ய வேண்டுமென, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் குடியிருப்பு பகுதி அருகே, ஊராட்சி இடமோ அல்லது தனியாருக்கு சொந்தமான இடமோ உள்ளது. குடியிருப்பு அருகே உள்ள காலி இடத்தை முறையாக பராமரிக்காமல் அப்படியே போடப்பட்டுள்ளதால் அதிகளவு செடிகள் முளைத்து உள்ளது.
இதனால், அங்கு கொசுத்தொல்லை மற்றும் விஷப்பூச்சிகள் தொல்லை இருப்பதால் குடியிருப்புவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஊராட்சி நிர்வாகம் இதை கவனித்து, செடிகளை அகற்றம் செய்ய இடத்தின் உரிமையாளரை அறிவுறுத்த வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
மக்கள் கூறியதாவது:
குடியிருக்கும் இடத்தின் அருகே, செடிகள் முளைத்திருந்தால் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு அதை சரி செய்துவிடலாம். ஆனால், மக்கள் பலர் குடியிருக்க இடம் வாங்கி அதை முறையாக பராமரிக்காமல் வெளியூர் சென்று விடுகின்றனர். வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே வந்து இடத்தை பார்த்து விட்டு செல்கின்றனர்.
அந்த இடங்களில் வளர்ந்துள்ள செடி, கொடி, புதரால், மாலை நேரத்தில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. குடியிருப்பு அருகே பராமரிப்பு இல்லாத இடத்தின் உரிமையாளர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் அபராதம் விதித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மக்கள் பலர் செடிகள் நிறைந்த இடத்தில் குப்பை கொட்டி செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. இதனால், துர்நாற்றம் ஏற்பட்டு, பொதுச்சுகாதாரம் பாதிக்கிறது. இதற்கும், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.