UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 05:36 PM

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே பெத்திக்குட்டையில், வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில், வனப்பகுதிகளில் இருந்து மீட்கப்படும் வனவிலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன், சிறுமுகை லிங்காபுரத்தில், தாயை பிரிந்து ஊருக்குள் சுற்றித்திரிந்த குட்டி யானை மீட்கப்பட்டு, மையத்தில் பராமரிக்கப்பட்டு, ஆனைமலை புலிகள் காப்பகம் கோழிகமுத்தி முகாமிற்கு இடமாற்றப்பட்டது. இந்நிலையில், அந்தியூர் வனப்பகுதிக்கு உட்பட்ட எண்ணமங்கலம் வனப்பகுதியில், கடந்த ஜூன் மாதம், தாயை இழந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு, 18 நாட்கள் பராமரித்து, வேறு யானை கூட்டங்களுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது பலனளிக்காததால், இம்மையத்தில், ஜூலை மாதம் சேர்க்கப்பட்டது.
அந்தியூர் வனச்சரகர் நந்தினி கூறுகையில், ''குட்டி யானையை பராமரித்து, தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க, சிறுமுகையில் உள்ள வன உயிரின சிகிச்சை மையத்தில் விடப்பட்டுள்ளது,'' என்றார்.
வனமீட்பு சிகிச்சை மைய வனச்சரகர் ராஜகுருவு கூறுகையில், ''குட்டி யானை மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. கால்நடை மருத்துவர்கள் கண்காணித்து, தேவையான ஊட்டச்சத்துகள் வழங்கி வருகின்றனர்,'' என்றார்.
