UPDATED : ஜூன் 13, 2026 07:11 AM
ADDED : ஜூன் 13, 2026 04:10 AM
உடலில் வலதுபுறம், இடதுபுறம் என 2 பக்கமும் நுரையீரல் பரவி உள்ளது. மனித உறுப்புகளில் மிகவும் சுலபமாக கிருமி தொற்று மற்றும் பாதிப்பு ஏற்படும் உறுப்பு நுரையீரல்.
மனித உடலில் மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், இவை முக்கியமான உறுப்புகள். இவற்றில் ஒன்று கெட்டு போனாலும் உயிருக்கு ஆபத்தாகி விடும். இதயத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோமோ, அத்தகைய முக்கியத்துவம் நுரையீரலுக்கும் அளிக்கப்படுகிறது.
காற்றில் உள்ள ஆக்சிஜனை ரத்தத்தில் சேர்ப்பதும், ரத்தத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடை (கரியமில வாயு) பிரித்து உடலில் இருந்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணியாகும்.ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு, நைட்ரஜன் உள்பட பல்வேறு வாயுக்கள் அடங்கிய வெளிக்காற்று சுவாச குழாய் வழியே நுரையீரலுக்குள் நுழைகிறது. இவ்வாறு வெளிக்காற்று வந்தவுடன் அதில் பெரும்பகுதியாக உள்ள ஆக்சிஜனை மட்டும் பிரித்தெடுத்து ரத்த அணுக்களுடன் சேர்த்து நல்ல ரத்தமாக மாற்றி இதயத்துக்கு அனுப்பும் பணியை நுரையீரல் செய்கிறது.
பின்னர் இதயத்தில் இருந்து தொடங்கி உடல் முழுவதுக்கும் பயணம் செய்து விட்டு வரும் கெட்ட ரத்தத்தை மீண்டும் சுத்திகரித்து ஆக்சிஜன் கலந்து நல்ல ரத்தமாக மாற்றி அனுப்புவதையும் நுரையீரல் செய்கிறது.
உடலில் வலதுபுறம், இடதுபுறம் என 2 பக்கமும் நுரையீரல் பரவி உள்ளது. வலதுபுறம் மூன்று பகுதிகளாகவும், இடதுபுறம் 2 பகுதிகளாகவும் நுரையீரல் அமைந்துள்ளது. 3 பகுதிகள் உள்ளதால் வலதுபுறம் நுரையீரலின் அளவு சற்று பெரிதாக காணப்படும். இதயத்துக்கு இருபுறமும் பாதுகாப்பாக இருந்து இதயத்தை அதிர்வுகளில் இருந்து காப்பாற்றுகிறது. பிறக்கும் போது குழந்தைகள் ஒரு பக்கம் நுரையீரல் இல்லாமலேயே பிறப்பார்கள். அந்த குழந்தைகளுக்கு ஒரு பக்கம் நுரையீரல் உருவாகாமலேயே இருக்கும். அதனால் பிரச்சினை ஒன்றும் ஏற்படாது.
நுரையீரலின் செயல்பாடு நுரையீரலுக்கு காற்று செல்ல மூச்சுக்குழாய் முக்கிய பங்கு வகிக்கிறது. மூக்கு வழியாக போகும் காற்று தொண்டையை கடந்து மூச்சுக்குழாய்க்குள் நுழையும். கழுத்து பகுதியில் தொட்டுப்பார்த்தால் மூச்சுக்குழாயை நம்மால் உணர முடியும். மூச்சுக்குழாய் கீழே போய் வலது, இடது என 2 பக்கம் பிரிகிறது. வெளியே இருக்கும் காற்று உள்ளே போகும்போது அந்த 2 நுரையீரலுக்கும் சரியாக போய் சேருகிறது. தேன் கூட்டில் சிறு, சிறு ஓட்டைகள் இருப்பது போன்று ஒவ்வொரு நுரையீரலிலும் இருக்கும். இதற்கு அல்வியோலி என்று பெயர். அல்வியோலியின் சுவர்கள் மிகவும் மெல்லியதாக இருக்கும். அந்த சுவர்களில் ரத்தக்குழாய் இருக்கிறது.
அந்த குழாய்களுக்குள் ஆக்சிஜன் செல்லும். அந்த சமயம் ரத்தக்குழாய்க்குள் இருக்கும் கார்பன்டை ஆக்சைடு வெளியே வரும். உள்ளே போகிற ரத்தக்குழாயில் பிராணவாயு எனப்படும் ஆக்சிஜன் அதிகம் இருக்கும். வெளியே வரும் சுவாச காற்றில் கார்பன்டை ஆக்சைடு அதிகம் இருக்கும்.
நுரையீரலில் இருந்து ரத்தம் சிவப்பு நிறத்தை அடைந்து, ஆக்சிஜன் நிறைந்த சுத்தமான ரத்தமாக இதயத்துக்கு செல்லும். இதயத்தில் இருந்து மற்ற பாகங்களுக்கு சுத்த ரத்தம் செலுத்தப்படுகிறது. எனவே இதயம் வேலை செய்தாலும், நுரையீரல் வேலை செய்யவில்லை என்றால் சுத்தமான ரத்தத்தை இதயமோ, மற்ற பாகங்களோ பெற முடியாது. எனவே தான் நுரையீரல் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம்.
மனித உறுப்புகளில் மிகவும் சுலபமாக கிருமி தொற்று மற்றும் பாதிப்பு ஏற்படும் உறுப்பு நுரையீரல். மற்ற உறுப்புகளை விட நுரையீரலானது நேரடியாக நாம் சுவாசிக்கும் காற்றுடன் தொடர்புடையது. சுவாசிக்கும் காற்று முதலில் மூக்கு வாயிலாக நுரையீரலுக்கு சென்று பின்னர் மற்ற உறுப்புகளுக்கு ரத்தத்தின் மூலம் செல்கிறது. எனவே தொற்று கிருமிகள் (பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை), காசநோய் கிருமி, கொரோனா கிருமி போன்றவை நேரடியாக நுரையீரலுக்கு சென்று எளிதில் நுரையீரல் தொற்றை ஏற்படுத்தி விடுகிறது.
ஆஸ்துமா, நிமோனியா, காசநோய், நுரையீரல் புற்றுநோய், தொழில் சார்ந்த நுரையீரல் நோய்கள் போன்றவை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள். இருமல், சளி, காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், சளியில் ரத்தம் கலந்து வெளி வருதல், நெஞ்சு வலி போன்றவை நுரையீரல் போன்றவை நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகள். சாதாரணமாக இந்த தொந்தரவுகள் 2 வாரத்தில் சரியாகி விடும்.
