/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியாறு தடுப்பணையில் விபத்து தடுக்க.. தீவிரமாக கண்காணிக்கணும்! போலீசாரின் தொடர் நடவடிக்கை அவசியம்
/
ஆழியாறு தடுப்பணையில் விபத்து தடுக்க.. தீவிரமாக கண்காணிக்கணும்! போலீசாரின் தொடர் நடவடிக்கை அவசியம்
ஆழியாறு தடுப்பணையில் விபத்து தடுக்க.. தீவிரமாக கண்காணிக்கணும்! போலீசாரின் தொடர் நடவடிக்கை அவசியம்
ஆழியாறு தடுப்பணையில் விபத்து தடுக்க.. தீவிரமாக கண்காணிக்கணும்! போலீசாரின் தொடர் நடவடிக்கை அவசியம்
ADDED : ஏப் 29, 2025 05:50 AM

பொள்ளாச்சி: கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில், ஆழியாறு தடுப்பணையில் சுற்றுலா பயணியர் குளிப்பதை தடுக்க, போலீசார் கண்காணிப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், உயிர் இழப்புகள் தொடர்கதையாகிவிடும்.
பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை, மீன் பண்ணை, பூங்கா, கவியருவி என சுற்றுலா பயணியர் மனம் கவரும் இடமாக உள்ளதால், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது.
தற்போது கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால், உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலாப்பயணியர் அதிகளவு வருகின்றனர்.
கவியருவி மூடல்
ஆழியாறு அருகே கவியருவியில் நீர் வரத்து இல்லாததால், மூடப்பட்டுள்ளது. குளித்து மகிழலாம் என வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலையே உள்ளது.
இந்நிலையில், ஆழியாறு அணை அருகே உள்ள தடுப்பணையில் குளிக்கின்றனர். இந்த தடுப்பணையில் புதை மணல் மற்றும் ஆழமான சுழல் இருப்பதால், சுற்றுலா பயணியர் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அத்தடையை மீறி ஏராளமானோர் தடுப்பணையில் குளிக்கின்றனர்.
அத்துமீறல்
வெளியூர்களில் இருந்து வருவோர் ஆபத்தை உணராமல் தடுப்பணையில் குளிக்கின்றனர். கடந்த, 25ம் தேதி, சென்னையில் இருந்து வந்த கல்லுாரி மாணவர்கள் தடுப்பணையில் குளித்த போது, மூன்று மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.இந்த துயர சம்பவத்தை அடுத்து, அங்கு நீர்வளத்துறை அதிகாரிகள் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.அதில், ஆழியாறு ஆறு மற்றும் அணை மிகவும் ஆழமானவை. அணை மற்றும் ஆற்றில் குளிப்பதற்கும், நுழைவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என, எச்சரிக்கை பலகையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நிரந்தர தடுப்பு
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஆழியாறு அணை தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டாலும் கண்காணிப்பு முறையாக மேற்கொள்வதில்லை.
விபத்துகள் நடைபெறும் போது மட்டுமே கண்காணிப்பு செய்யப்படுகிறது. ஒரு சில நாட்கள் மட்டுமே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.மேலும், தடுப்பணை பகுதிக்கு யாரும் செல்ல முடியாதவாறு நிரந்தர தடுப்பு அமைக்க வேண்டும்.
கோடை விடுமுறை முடியும் வரை அங்கு போலீசார், நீர்வளத்துறை அதிகாரிகள் இணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். ஆழியாறு அணைப்பகுதியிலும் ஆபத்தை உணராமல் இறங்குவதை தடுக்க, கண்காணிப்பு செய்ய வேண்டும்.
வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணியருக்கு தெரியும் வகையில், ஆபத்தான பகுதிகள் குறித்து எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.