/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருப்பரங்குன்றம் மலையை காக்க... காக்க... கோவில்களில் கூட்டு பிரார்த்தனை
/
திருப்பரங்குன்றம் மலையை காக்க... காக்க... கோவில்களில் கூட்டு பிரார்த்தனை
திருப்பரங்குன்றம் மலையை காக்க... காக்க... கோவில்களில் கூட்டு பிரார்த்தனை
திருப்பரங்குன்றம் மலையை காக்க... காக்க... கோவில்களில் கூட்டு பிரார்த்தனை
ADDED : பிப் 05, 2025 12:24 AM

திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டி, சூலுார், அன்னுார், மேட்டுப்பாளையம் உட்பட கோவை புறநகர் பகுதிகளில் பா.ஜ., மற்றும் இந்து அமைப்பினர் கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரி, இந்து முன்னணி சார்பில் நேற்று அறப்போராட்டம் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று காலை திருப்பரங்குன்றம் நோக்கி செல்ல முயன்ற இந்து முன்னணியினர், பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர்.
சூலுார் கிழக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் விக்னேஷ் தலைமையில் தொண்டர்கள், குமரன் கோட்டம் அறுபடை முருகன் கோவிலில், திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டி, கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர்.
இதேபோல், செஞ்சேரிமலையில் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் தொண்டர்கள் கூட்டுப் பிராத்தனை செய்தனர்.
சிறப்பு வேண்டுதல்
காரமடை அருகே குருந்தமலை உள்ளது. இங்கு குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரி, காரமடை நகராட்சி கவுன்சிலர் விக்னேஷ் தலைமையிலான பா.ஜ.,வினர் நேற்று, திருப்பரங்குன்றம் மலைக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என சிறப்பு பூஜைகளுடன் வேண்டுதல் செய்தனர்.
----ஆர்ப்பாட்டம்
கோவை வடக்கு மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், துடியலூர் பஸ் ஸ்டாண்டில் ஹிந்து முன்னணி கோவை கோட்ட பொறுப்பாளர் பாலன் தலைமையில், 50 பேர் தடையை மீறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை துடியலூர் போலீசார் கைது செய்து, தொப்பம்பட்டி பிரிவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்நிலையில், மதுரையில் ஹிந்து முன்னணியினர் அமைதி வழியில் அறப்போராட்டம் நடத்த மதுரை உயர்நீதிமன்றம் அனுமதித்ததால், நேற்று மாலை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பா.ஜ., சார்பில் நடத்தப்பட இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது.
அன்னுார்
அன்னுார் ஒன்றியத்திலிருந்து இந்து முன்னணியினர் நேற்று காலை திருப்பரங்குன்றம் செல்வதற்காக புறப்பட்டு வந்தனர். கைகாட்டி அருகே அன்னூர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி இந்து முன்னணியினர் 17 பேரை கைது செய்து அன்னூரில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்தனர்.
இந்நிலையில் பா.ஜ., சார்பில், தமிழக அரசை கண்டித்தும் கைகாட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தனர். அன்னூர் போலீசார் இதற்கு அனுமதி மறுத்து தடை விதித்தனர். இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைகாட்டியில் திரண்டனர்.
சாலை மறியல்
திருப்பூரில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், போலீசாரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் ஹிந்து முன்னணியினர், பஸ் ஸ்டாண்ட் அருகே சாலை மறியல் செய்தனர். இந்த போராட்டத்திற்கு ஹிந்து முன்னணி கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
இதில் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், துணைத் தலைவர் தங்கவேல், மேட்டுப்பாளையம் நகர தலைவர்கள் தேவன், காளியப்பன் உள்பட, 30க்கும் மேற்பட்ட ஹிந்து முன்னணியினர் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவில் முன், சாலை மறியல் செய்தனர்.
இவர்களை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
-நமது நிருபர் குழு-