/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஜன 04, 2025 11:07 PM

மார்கழி திருவாதிரை
பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோவிலில், மார்கழி திருவாதிரை உற்சவ விழாவில், திருவெம்பாவை உற்சவம், ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் புறப்பாடு நடக்கிறது. திருப்பேரூர் ஸ்ரீஞானமா நடராஜரின் திருவாதிரை திருவிழாவையும், ஆனந்த தாண்டவ தரிசனத்தையும் கண்டு மகிழ, பக்தர்களுக்கு சிறந்த வாய்ப்பு.
75வது ஆண்டு விழா
ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கம் சார்பில், 75வது ஆண்டு விழா, ஆர்.எஸ்.புரம் பலிஜ நாயுடு திருமண மண்டபத்தில் நடக்கிறது. காலை 5:00 மணி முதல் கணபதி ஹோமம், புஷ்பாஞ்சலி, காலை 11:30க்கு நடக்கும் பக்தி ப்ரவாஹத்தில் சவுமியா அபிஷேக் ராஜூ, மாஸ்டர் சாய் சமர்த் குழுவினர் பங்கேற்கின்றனர். மாலை 6:30க்கு கலைமாமணி ராஜேஷ் வைத்யா குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சி நடக்கிறது.
85வது குருபூஜை விழா
பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சரின் 85வது குருபூஜை விழா, காலை 5:00 மணியளவில், ஆரத்தி, பஜனையுடன் துவங்குகிறது. கொடியேற்றம், கலை, கல்விப்பொருட்கள் கண்காட்சி, பொருட்காட்சி, நாமசங்கீர்த்தனம், சிறப்பு சொற்பொழிவு என பல நிகழ்ச்சிகள் களைகட்ட உள்ளன.
குடும்ப திருவிழா
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குருவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தொண்டாமுத்துார் வட்டார சத்குருவின் குடும்ப உறுப்பினர்கள், சத்குருவின் குடும்ப திருவிழா நிகழ்ச்சியை, மதியம் 1:00 மணிக்கு, சிறுவாணி பிரதான சாலை, மத்வராயபுரம் கிராமத்தில் உள்ள சக்திவேல் தோட்டத்தில் நடத்துகின்றனர். கோலப்போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இலக்கிய சந்திப்பு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், கோவை மாவட்ட குழு சார்பில், இலக்கிய சந்திப்பு, ரயில் நிலையம் எதிரில், தாமஸ் கிளப்பில் காலை 10:00 மணிக்கு நடக்கிறது. பத்மஸ்ரீ விருது பெற்ற பத்திரப்பனுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. மக்கள் இசைப் பாடல்கள், பொங்கல் சிறப்பு கவியரங்கம் ஆகியவை நடக்கின்றன.
காதி பொருட்கள் கண்காட்சி
காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் சார்பில், காதி பொருட்கள் கண்காட்சி, ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில், காலை 10:00 மணி முதல் நடக்கிறது. கடைசி நாளான இன்று, காதி பொருட்களை வாங்க வேண்டும் என்ற ஆவலில் இருப்பவர்கள், வாய்ப்பை தவற விட வேண்டாம்.
சிறப்பு சொற்பொழிவு
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்ப வருவாரோ' சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் அரங்கத்தில், மாலை 6:00 மணிக்கு அருளிசையுடன் துவங்குகிறது. மாலை 6:30 மணிக்கு, அருளாளர் முத்துசுவாமி தீட்சிதர் குறித்து, பேச்சாளர் சுமதி ஆன்மிக உரை நிகழ்த்துகிறார்.
பட்டமளிப்பு விழா
அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 36வது பட்டமளிப்பு விழா, காலை 10:00 மணிக்கு நடக்கிறது. நிறுவன வேந்தர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகிக்கிறார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ண தேவி பட்டம் வழங்க உள்ளார்.
தர்ம சாஸ்தா மஹோத்ஸவம்
ஸ்ரீ சபரீச சேவா சங்கம் சார்பில், தடாகம் ரோடு, இடையர்பாளையம் கார்னரில் உள்ள வி.ஆர்.ஜி., திருமண மஹாலில், ஸ்ரீ தர்ம சாஸ்தா மஹோத்ஸவம், காலை 6:00 மணி முதல் ஹோமம், சங்காபிஷேகம், அஷ்டாபிஷேகம், நாமசங்கீர்த்தனம், புஷ்பாஞ்சலி ஆகியவை நடக்கின்றன. மதியம் 1:00 மணியளவில், அன்னதானம் நடக்கிறது.
பரதநாட்டிய திருவிழா
மார்கழி மாதத்தில், ஆன்மிக சொற்பொழிவு, இசை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, குருகுலம் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் சார்பில், 5ம் ஆண்டு மதிநிறை மார்கழி இசை மற்றும் பரதநாட்டிய திருவிழா, சுந்தராபுரம் செங்கப்பகோனார் திருமண அரங்கத்தில், பிற்பகல் 3:00 மணி முதல் நடக்கிறது.
கலைத்திருவிழா மாநாடு
தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில், கோவை மாவட்டத்தின் முதலாம் ஆண்டு கலைத்திருவிழா மாநாடு, காலை 8:30 மணி முதல், பேரூர் பிரதான சாலை, செட்டி வீதி, கே.சி.தோட்டம், கொங்கு மஹால் கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. இசைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
வேளாண் திருவிழா
'விவசாயம் காப்போம்; விவசாயிகளை போற்றுவோம்' என்ற நோக்கில், ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரியில், வேளாண் திருவிழா நடக்கிறது. காலை 5:00 முதல் மாலை 5:00 மணி வரை ரேக்ளா பந்தயம், காலை 9:00 மணி முதல் வேளாண் வர்த்தக கண்காட்சி, மாலை 5:00 மணி முதல் பரிசளிப்பு விழா நடக்கிறது.
சிரிப்பு ஒரு வரம்'
கோவை நகைச்சுவை சங்கம் சார்பில், சிரிப்பு ஒரு வரம்' என்ற தலைப்பில், 'ஏனுங்க வாங்க சிரிக்கலாம்' என்ற நிகழ்ச்சி, நவ இந்தியா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், மாலை 5:30 மணிக்கு நடக்கிறது. புலவர் ராமலிங்கம் பங்கேற்கிறார். இளம் தலைமுறை பேச்சாளர்களும் பங்கேற்று, சிரிக்க வைக்க உள்ளனர்.
கிராமத்தில் பொங்கல் விழா
நேட்டிவ் மெடிகேர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், ஆனைகட்டி கோபனாரி ஆதிவாசி கிராமத்தில், பொங்கல் விழா, காலை 10:00 மணியளவில் நடக்கிறது. எம்.பி.,ஈஸ்வரசாமி, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.