/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
61வது வார்டில் புதருக்குள் கழிப்பறை; பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு
/
61வது வார்டில் புதருக்குள் கழிப்பறை; பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு
61வது வார்டில் புதருக்குள் கழிப்பறை; பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு
61வது வார்டில் புதருக்குள் கழிப்பறை; பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு
ADDED : நவ 12, 2024 05:54 AM

அடிப்படை வசதிகளின்றி தவிப்பு
சூலுார், பட்டணம், அம்மன் நகர் பகுதியில், அங்கன்வாடி மற்றும் பள்ளி அருகே திறந்தநிலை கிணறு ஒன்று உள்ளது. பாதுகாப்பு தடுப்பற்ற இந்த கிணற்றில் குழந்தைகள் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. இப்பகுதியில் தார் சாலை வசதியில்லாததால், மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. தெருவிளக்கு வசதியும் இல்லை.
- மோகன்ராஜ், சூலுார்.
புதருக்குள் பொதுக்கழிப்பறை
கோவை மாநகராட்சி, 61வது வார்டு, கள்ளிமடையில் உள்ள ஆண்கள் பொதுக் கழிப்பறையின் முன்புறமும், பின்புறமும் அடர் புதர் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷ உயிரினங்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. புதர்களை அகற்றி, சுத்தம் செய்ய வேண்டும்.
- சுந்தர், கள்ளிமடை.
எப்போது விழுமோ?
வடவள்ளி, டாட்டா நகர் பிரதான சாலையில், பெரிய மரம் ஒன்று காய்ந்து விழும் நிலையில் உள்ளது. போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால், மரம் விழுந்தால் உயிரிழப்புகள் நிகழவும் வாய்ப்புள்ளது. உடனடியாக மரத்தை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.
- கனகராஜன், வடவள்ளி.
அரைகுறை பணியால் அவதி
மதுக்கரை மார்க்கெட் ரோடு, 97 வது வார்டு, மோகன் நகர், ரத்தினம் பள்ளி மேம்பாலம் அருகே, சாலை விரிவாக்கப்பணி சரிவர மேற்கொள்ளவில்லை. முழுமையாக தார் சாலை அமைக்காததால் சாலையோரத்தில் பள்ளமாக உள்ளது. பிரதான சாலையிலிருந்து, குடியிருப்பு பகுதிக்கு வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது.
- சரவணன், மோகன் நகர்.
தெருவிளக்கு பழுது
ஜி.என்.,மில்ஸ், சுப்பிரமணியம்பாளையம், சக்தி அவென்யூ விரிவாக்க பகுதியில், ' எஸ்.பி - 22 பி -31' என்ற எண் கொண்ட கம்பத்தில் கடந்த 10 நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. தெருவிளக்கு பழுது குறித்து, பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லை.
- வெங்கடேஷ், ஜி.என்.,மில்ஸ்.
சேதமடைந்த ரோடு
விளாங்குறிச்சி மெயின் ரோடு, விநாயகபுரம், 21வது வார்டு, பாரதியார் வீதியில் சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. தரமற்ற பேட்ச் வொர்க்குகள் ஒரு மழைக்கே காணாமல் போய்விடுகிறது. குண்டும், குழியுமான சாலையால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
- சந்தோஷ்குமார், விநாயகபுரம்.
நாய்களால் தொல்லை
கணபதி, ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்வோர்களை நாய்கள் துரத்தி அச்சுறுத்துகின்றன. குழந்தைகள், முதியவர்கள் சாலையில் நடந்து செல்வதற்கே அஞ்சுகின்றனர்.
- தீபன், ஐஸ்வர்யா கார்டன்.
மூடப்படாத பள்ளங்கள்
புலியகுளத்திலிருந்து சவுரிபாளையம் செல்லும் சாலை, குழாய் பதிபிற்காக பல இடங்களில் தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின் பள்ளத்தை சரியாக சீரமைக்கவில்லை. குழிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
- இந்திரஜித், புலியகுளம்.
அகற்றப்படாத கழிவுகள்
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், 57வது வார்டு, ஒண்டிப்புதுார், எஸ்.எம்.எஸ்.லே -அவுட்டில் குழந்தைகள் விளையாட்டு பூங்கா இடத்திலிருந்த, ஆக்கிரமிப்புகள் சமீபத்தில் அகற்றப்பட்டது. ஆனால், கட்டடக்கழிவுகளை முழுமையாக அகற்றவில்லை. சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
- பழனிசாமி, ஒண்டிப்புதுார்.
பராமரிப்பின்றி பூங்கா
கோவை மாநகராட்சி, 39வது வார்டு, பாரதியார் நகர் பூங்கா முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. பூங்கா முழுவதும் புதர்கள், களைச்செடிகள் வளர்ந்துள்ளது. குப்பையும் முறையாக அகற்றுவதில்லை. விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளது.
- கார்த்திக், பாரதியார் நகர்.
இருளால் அதிகரிக்கும் குற்றம்
ராமநாதபுரம், 64வது வார்டு, கணேசபுரம், சுப்பையன் வீதி, கிழக்கு பகுதியில் உள்ள தெரு விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. கடும் இருள் காரணமாக இரவு நேரங்களில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடக்கிறது. பலமுறை புகார் தெரிவித்தும் தெருவிளக்குகளை சரி செய்யவில்லை.
- ராஜூ, ராமநாதபுரம்.
புதர் மண்டிய பூங்கா
கோவை மாநகராட்சி, இரண்டாவது வார்டு, வெள்ளக்கிணறு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி இரண்டில், சிறுவர் பூங்கா புதர்மண்டி உள்ளது. விஷ பாம்புகள் நடமாட்டம் உள்ளதால் குழந்தைகள் பூங்காவிற்குள் செல்ல அஞ்சுகின்றனர்.
- மணிமாறன், வெள்ளக்கிணறு.
தெருவிளக்குகள் பழுது
தொண்டாமுத்துார் ரோடு, சின்மயா நகர், குறிஞ்சி மின் நகர் மற்றும் ஜி.கே.எஸ்.,அவென்யூ பேஸ்-3 பகுதிகளில் தெருவிளக்குகள் எரியவில்லை. இரவு நேரங்களில் வெளியில் நடக்கவே முடியவில்லை. பாதுகாப்பற்ற சூழல் நிலவு வதால் விரைந்து தெருவிளக்குகளை சரி செய்ய வேண்டும்.
- ஸ்ரீதர், சின்மயா நகர்.
நோய் பரவும் அபாயம்
சின்னவேடம்பட்டி, அத்திப்பாளையம் ரோட்டில், சைதன்யா டெக்னோ பள்ளி அருகே வேலன் காபிக்கு எதிரே, ஆண்கள் தங்கும் விடுதி உள்ளது. விடுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் பாதையில் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றமும், நோய் பரவும் அபாயமும் உள்ளது.
- ராமராஜ், சின்னவேடம்பட்டி.
மூச்சை முட்டும் துர்நாற்றம்
நீலிக்கோணம்பாளையம், 59வது வார்டு, பாலசுந்தரம் லே-அவுட்டில், சிறுவர் பூங்கா அருகே தொடர்ந்து சிலர் குப்பையை வீசிச் செல்கின்றனர். பல வாரங்களாக தேங்கி நிற்கும் கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பூங்காவிற்கு வருவோர் மூக்கைப் பொத்திக்கொண்டு நடக்க வேண்டியுள்ளது.
- கார்த்திக் ராஜா, நீலிக்கோணாம்பாளையம்.