/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தக்காளி விலை சரிவு; விவசாயிகள் கவலை
/
தக்காளி விலை சரிவு; விவசாயிகள் கவலை
ADDED : ஜன 17, 2025 11:45 PM

பொள்ளாச்சி; உரிய விலை கிடைக்காததால், பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், பயிரிடப்பட்ட தக்காளி செடிகளில், காய்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர்.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், அதிகளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், தக்காளி விலை (15 கிலோ பெட்டி) ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி மேற்கொண்டனர்.
இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன் நடவு செய்யப்பட்ட தக்காளி செடிகளில், காய்கள் விளைந்து தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் அதிகளவு தக்காளி தருவிக்கப்படுகிறது.
தேவைக்கு அதிகமாக தக்காளி வரத்தால், விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மார்க்கெட்டில், 15 கிலோ பெட்டி, 210 ரூபாய்க்கு விற்கப்படுவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பறிப்பு கூலிக்கு கூட கட்டுபடியாகாத காரணத்தில், விளைந்த தக்காளிகள் பறிக்கப்படாமல் செடியிலேயே விடப்படுகிறது.
விவசாயிகள் கூறியதாவது:
தக்காளிக்கு போதிய விலை கிடைக்கவில்லை. விளைந்த தக்காளியை தரம் பார்த்து பிரித்தெடுக்க தொழிலாளர்களின் கூலி அதிகமாகிறது. இதனால், தக்காளியை அறுவடை செய்தும் பயன் இல்லாததால், விளைந்த நிலத்திலேயே விடப்படுகிறது. சில விளைநிலங்களில் தக்காளி செடியில் நோய் தாக்குதலும் காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் தக்காளி பறிக்க ஆர்வம் காட்டுவதில்லை.
இவ்வாறு, கூறினர்.