ஹோட்டல், கடைகளில் உணவு பாதுகாப்புக்கு கடிவாளம்! பழைய உணவுகளை சூடுபடுத்தி வழங்கக்கூடாது
ஹோட்டல், கடைகளில் உணவு பாதுகாப்புக்கு கடிவாளம்! பழைய உணவுகளை சூடுபடுத்தி வழங்கக்கூடாது
UPDATED : ஆக 22, 2026 05:25 AM
ADDED : ஆக 21, 2026 04:31 PM

பொள்ளாச்சி: 'உணவு பாதுகாப்பு துறை சான்றிதழ் அனைவரது பார்வையில் தென்படும் வகையில் வைக்க வேண்டும். குளிர்பதன பெட்டியில் வைத்திருக்கும் பழைய உணவுகளை சூடுபடுத்தி வழங்க கூடாது,' என, பொள்ளாச்சியில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை, ேஹாட்டல் உரிமையாளர்கள் சங்கம், பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், வட்டார சிறு வியாபாரிகள் சங்கம் சார்பில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் - 2006, குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தொழில் வர்த்தக சபை தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். ேஹாட்டல் உரிமையாளர் சங்க தலைவர் காமராஜ் வரவேற்றார்.
கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா பேசியதாவது:
உணவு பாதுகாப்பு சட்டம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. ேஹாட்டல்கள், பேக்கரி, கடைகள் பெறும் உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ்கள் கட்டாயமாக அனைவரின் பார்வைக்கும் தெரியும் வகையில் வைக்க வேண்டும்.
தற்போது, ஆண்டுக்கு, 1.5 கோடி வர்த்தகம் நடைபெற்றால், 100 ரூபாய் கட்டணம் செலுத்தி, பதிவு சான்று பெறலாம். 1.5 கோடி ரூபாய்க்கு மேல், 50 கோடி ரூபாய்க்குள் வர்த்தகம் நடைபெற்றால், 5,000 ரூபாயும், 50 கோடி ரூபாய்க்கு மேல் என்றால், 7,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், மத்திய அரசின் சான்றிதழ் பெற்று பணிகளை மேற்கொள்ள முடியும்.
கடை, ேஹாட்டல்கள் விபரங்கள், 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்தால், ஐந்தாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் போது, கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். மீண்டும் விபரங்களை பதிவு செய்ய தேவையில்லை.
உணவு பொருட்களை வாங்கி பயன்படுத்துவோர் அதிகமாக உள்ளனர். எனவே, 'பேக்கிங்' செய்யும் போது, பேக்கிங் லேபிளில், பெயர், வெஜ் என்பதை குறிக்கும் குறியீடு உள்ளிட்ட, 14 வகையான விபரங்கள் குறிப்பிடப்பட வேண்டும். அதில் இந்த உணவை உட்கொண்டால் பலன் அளிக்கும் போன்ற தவறான நம்பிக்கைகளை கொடுக்க கூடாது. 100 சதவீதம், சுத்தமானது போன்றவை எதுவும் லேபிளில் இருக்க கூடாது. ஆர்கானிக் என்றால் அதற்குரிய லோகோ, உணவு பாதுகாப்பு துறை எண்ணுடன் பதிவிட வேண்டும்.
மூன்று மாதத்துக்குள் பொருட்களை பயன்படுத்தலாம் என்றால், மூன்று மாதம் என குறிப்பிடலாம். மூன்று மாதத்துக்கு மேல் என்றால், மாதம், ஆண்டு கட்டாயம் குறிப்பிட வேண்டும். முறையாக பேக்கிங் செய்யாமல், சாக்கு பைகளில் உணவு பொருட்களை கொண்டு வரக்கூடாது.
அரிசி மூட்டை, சக்கரை மூட்டை போன்றவை கீழ் தரையில் வைக்க கூடாது. டேபிள் போட்டு பாதுகாப்பாக வைக்க வேண்டும். ேஹாட்டல்கள் சுத்தம், சுகாதாரமாக இருக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது. அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் போன்றவை விற்க கூடாது.
முதல் நாள் தயாரித்த உணவு மீதமாகும் போது, குளிர்பதன பெட்டியில் வைத்து, மறு நாள் சூடுபடுத்தி மக்களுக்கு வழங்க கூடாது. இரும்பு கத்தி, மரக்கட்டை போன்றவை பயன்படுத்த கூடாது. ஸ்டீல் கத்தியை பயன்படுத்தலாம். உணவு பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களில், மற்ற பயன்பாட்டுக்கு பயன்படுத்த கூடாது.
ஒரு முறை பலகாரம் தயாரிக்க பயன்படுத்திய எண்ணெய்யை, மறுமுறை பயன்படுத்த கூடாது. விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்படும். ஆய்வின் போது, குறைகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, பேசினார்.
