/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லாறு பண்ணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை :விவசாயிகள் நாற்றுகள் வாங்க வரலாம்
/
கல்லாறு பண்ணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை :விவசாயிகள் நாற்றுகள் வாங்க வரலாம்
கல்லாறு பண்ணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை :விவசாயிகள் நாற்றுகள் வாங்க வரலாம்
கல்லாறு பண்ணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை :விவசாயிகள் நாற்றுகள் வாங்க வரலாம்
ADDED : மார் 05, 2024 08:58 PM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாகவும், ஊட்டி செல்வோரின் முக்கிய சுற்றுலா தலமாகவும் செயல்பட்டு வந்த கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே ஊட்டி சாலையில் முதல் கொண்டை ஊசி வளைவில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கல்லாறு.
இங்கே கடல் மட்டத்திலிருந்து 360 மீட்டர் உயரத்தில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. இதனால் இங்கு தட்பவெப்ப நிலை மிகவும் இதமாக இருக்கும். அதிக குளிரும் இருக்காது, அதிக வெயிலும் இருக்காது.
இங்கு எலுமிச்சை, கொய்யா, மாதுளை, பலா, திராட்சை, மங்குஸ்தான், துரியன், லிச்சி, ரம்புட்டான், மிளகு, கிராம்பு, ஜாதிக்காய்,இலவங்கப்பட்டை போன்றவை பயிரிடப்படுகின்றன. தரமான மர நாற்றுக்கள் ரூ.10 முதல் 20 வரை உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.
இப்பண்ணை மிகவும் இயற்கை சூழலில் அமைந்துள்ளதால் சிறந்த சுற்றுலா மையமாக விளங்குகிறது. இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சிறியதாக அருவியும் உள்ளது.
விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள் என முக்கிய நாட்களில் இங்கு உள்ளூர் மக்கள் மற்றும் ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். இதனிடையே கல்லாறு பகுதி யானைகள் வழித்தடமாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் இங்கு யானைகள் வருவதால் அவற்றை தொந்தரவு செய்யக்கூடாது. அதே சமயம் மக்களின் உயிர்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்ற நோக்கில் அதற்கான நடவடிக்கைகளை கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணை நிர்வாகத்தினர் எடுத்து வருகின்றனர். மேலும் கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையை இடமாற்றம் செய்யவும் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை எதிர்த்து தோட்டக்கலை துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில், கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையில் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின் வேலிகள், குழந்தைகள் பார்க் போன்றவை அகற்றப்பட்டன. இதனிடையே தற்போது மக்களின் பாதுகாப்பை கருதி, தோட்டக்கலை துறை நிர்வாகம் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளது.
இது குறித்து கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணை மேலாளர் மோகன்குமார் கூறுகையில், சுற்றுலா பயணிகள், மக்களின் பாதுகாப்பை கருதி கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணைக்கு சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் விவசாயிகள் வந்து மர நாற்றுகளை வாங்கி செல்லலாம். மர கன்றுகள் உற்பத்தி, பண்ணை பராமரிப்பு போன்றவைகள் செயல்பாட்டில் தான் உள்ளது, என்றார். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறை அன்று 15 முதல் 17ம் தேதி வரை மூன்று நாட்களில் 2,742 பேர் இங்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தடை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில்,
சுமார் 124 ஆண்டுகளாக இந்த பண்ணை உள்ளது. உள்ளூர் மக்களின் சிறந்த பொழுதுபோக்குதலம். குறைந்த கட்டணத்தில் குழந்தைகளுடன் வந்து மகிழ்ந்து சென்றோம். இந்த தடை மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்க வேண்டும் என்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையை சார்ந்த கல்லூரி மாணவர்கள் படிப்பு சார்ந்த ஆய்வுகளுக்காக இங்கு வந்து செல்கின்றனர்.
அவர்களுக்கு தடை இல்லை என்றாலும், எதிர்காலத்தில் இப்பண்ணை மூடப்பட்டால் அது மாணவர்களின் படிப்பை பாதிக்கும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

