/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகனங்களை மறித்த யானை சுற்றுலா பயணியர் அச்சம்
/
வாகனங்களை மறித்த யானை சுற்றுலா பயணியர் அச்சம்
ADDED : அக் 09, 2025 03:00 AM

வால்பாறை: வால்பாறை --- அதிரப்பள்ளி சாலையில், வாகனங்களை வழிமறித்த, 'கபாலி' என்ற ஒற்றை யானையால் சுற்றுலா பயணியர் அச்சமடைந்தனர்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், வால்பாறை - அதிரப்பள்ளி சாலையில், சமீப காலமாக யானைகள் கூட்டம் பகல் நேரத்திலேயே வாகனங்களை வழிமறிக்கின்றன.
இந்நிலையில், வால்பாறையிலிருந்து மளுக்கப்பாறை வழியாக, அதிரப்பள்ளி செல்லும் சாலையில், கபாலி என்ற யானை, வாகனங்களை வழிமறித்தது. இதில், சுற்றுலா பயணியர் பீதியடைந்தனர்.
சிறிது நேரத்திற்கு பின் வாகனங்களுக்கு வழிவிட்டு ஓரமாக நின்றது. அதன்பின், அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டன.
அதிரப்பள்ளி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை - அதிரப்பள்ளி சாலையில், அடிக்கடி ஒற்றை யானை வழிமறிக்கிறது. யாரையும் தொந்தரவு செய்வதில்லை. நாம் அமைதியாக இருந்தாலே போதும். யானை வாகனத்தை வழிமறித்தால் கூச்சலிடாமல், அமைதி காக்க வேண்டும். யானைகள் நடமாட்டம் உள்ளதால் இருசக்கர வாகனங்களில் சுற்றுலா பயணியர் வருவதை தவிர்க்க வேண்டும்' என்றனர்.