/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புத்தாண்டில் சுற்றுலா பயணியர் குதுாகலம்
/
புத்தாண்டில் சுற்றுலா பயணியர் குதுாகலம்
ADDED : ஜன 02, 2026 05:52 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆங்கிலபுத்தாண்டைமுன்னிட்டு, சுற்றுலா பயணியர்குடும்பத்துடன்திரண்டுகொண்டாடி மகிழ்ந்தனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆங்கில புத்தாண்டு நேற்று கொண்டாடப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு, நிறுவனங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் விடுமுறை அளிக்கப்பட்டதால், பலரும் குடும்பத்துடன், பொழுதை கழிக்க சுற்றுலா தலங்களுக்கு வந்தனர்.
ஆழியாறு அணைப்பகுதியில், நேற்று சுற்றுலாப் பயணியர் அதிகளவுதிரண்டனர். பலரும் ஆழியாறு அணைப்பூங்கா மற்றும் அணைப்பகுதியில் நின்று புகைப்படம் எடுத்தனர். கவியருவியில் கொட்டும் நீரில்குளித்து மகிழ்ந்தனர்.
இதேபோன்று, வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்தனர். இதனால், சக்தி - தலனார் செல்லும் ரோட்டில் உள்ள வியூ பாயின்ட், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் உள்ளிட்ட பகுதிகளில், சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
பருவமழைக்கு பின் தற்போது குளுகுளு சீசன் நிலவும் நிலையில், புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடினர். ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகையால் வால்பாறையில் உள்ள தங்கும் விடுதிகள், ரிசார்ட்கள் ஹவுஸ் புல்லாகின.
சுற்றுலா பயணியர் கூறியதாவது:
தொடர் விடுமுறையால் குடும்பத்துடன் வால்பாறையை கண்டு ரசிக்க வந்துள்ளோம். ஆனால் இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கட்டணம் மட்டும் வசூலிக்கின்றனர். ஆனால் சுற்றுலா பயணியருக்கு போதிய வசதிகள் செய்துதரப்படவில்லை.
இதே போல், நகராட்சி சார்பில் கார் பார்க்கிங் வசதியும் செய்துதரவில்லை. இதனால் வாகனங்களை நிறுத்த இடமின்றி கடும் சிரமத்திற்குள்ளாகிறோம். அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.

