/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடையை மீறும் சுற்றுலா பயணியர்: கலெக்டர் உத்தரவு காற்றில் பறக்குது
/
தடையை மீறும் சுற்றுலா பயணியர்: கலெக்டர் உத்தரவு காற்றில் பறக்குது
தடையை மீறும் சுற்றுலா பயணியர்: கலெக்டர் உத்தரவு காற்றில் பறக்குது
தடையை மீறும் சுற்றுலா பயணியர்: கலெக்டர் உத்தரவு காற்றில் பறக்குது
ADDED : நவ 07, 2024 07:55 PM

வால்பாறை; கோவை கலெக்டரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, தடையை மீறி ஆறுகளில் குளிக்கும் சுற்றுலா பயணியரை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வால்பாறையில் சுற்றுலா பயணியர் அதிக அளவில் வரும் சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, சோலையாறு பிர்லா நீர்வழிப்பாதை, சோலையாறுஅணை கரையோரப்பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு, பொதுப்பணித்துறை, நகராட்சி துறைகளின் சார்பில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்., 20ம் தேதி வால்பாறைக்கு சுற்றுலா வந்த, ஐந்து கல்லுாரி மாணவர்கள், சோலையாறு பிர்லா நீர்வழிப்பாதையில் உள்ள ஆற்றில் குளிக்கும் போது, நீர்ச்சூழலில் சிக்கி உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து, சிறுகுன்றா கூழாங்கல்ஆறு, சின்னக்கல்லாறு, சோலையாறு அணை உள்ளிட்ட, 20 இடங்களுக்கு சுற்றுலா பயணியர் செல்லவோ, குளிக்கவோ கூடாது என கோவை கலெக்டர் கிராந்திகுமார் தடை விதித்தார்.
இதனை தொடர்ந்து, சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றையொட்டி இருந்த தற்காலிக கடைகளை போலீசார் உடனடியாக அகற்றினர். இருப்பினும் தடை விதிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் சுற்றுலா பயணியர் அத்துமீறி குளிக்கின்றனர். இதனால், அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறையில், தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணியர் மீண்டும் குளிக்கின்றனர். இதனால், அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணியர் செல்லாதவாறு, கம்பிவேலி அமைப்பதுடன், எஸ்டேட் அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும், என்றனர்.
கண்காணிப்பு தேவை
வால்பாறையில் இருந்து, 3 கி.மீ., தொலைவில் உள்ள சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றையொட்டி தேயிலை எஸ்டேட் உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி சுற்றுலா பயணியர் கும்பலாக சென்று, மது அருந்திவிட்டு, பாட்டில்களை உடைத்து ஆற்றில் வீசி செல்கின்றனர்.
இதனால், சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றை காண வரும் சுற்றுலா பயணியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சுற்றுலா பயணியர் அதிக அளவில் வரும் நாட்களில் போலீசாருடன், வனத்துறையினரும் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டால், வீதிமீறலை தடுக்கலாம்.