UPDATED : நவ 14, 2026 12:00 AM
ADDED : நவ 13, 2026 08:04 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தொண்டாமுத்துாரில், வேளாண்துறையின் சார்பில்,பாரம்பரிய வேளாண் மேம்பாட்டு திட்டம் குறித்து விவசாயிகளுக்கு, குழு மேம்பாட்டு பயிற்சி நடந்தது. இயற்கை வள, மண்வள மேம்பாட்டை முதன்மையாக கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண் துணை இயக்குனர் (ஓய்வு) மோகன்ராஜ் சாமுவேல், விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், பண்ணை பதிவேடு பராமரிப்பு குறித்தும், இயற்கை வழியில் இடுபொருள் மேலாண்மை மற்றும் பூச்சி நோய் மேலாண்மை குறித்து விளக்கினார்.
மேலும், பங்கேற்பு உத்திரவாத சான்றிதழின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது. துணை வேளாண் அலுவலர் சந்தியாகு இருதயராஜ், மத்திய, மாநில திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து பேசினார்.
கிராம தங்கல் திட்ட வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவியர், மீன் அமிலம் தயாரிப்பு, தெளிப்பு உள்ளிட்டவை குறித்து விளக்கினர். வேளாண்துறை உதவி அலுவலர்கள் பங்கேற்றனர்.
