/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு!
/
ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு!
ADDED : மார் 11, 2024 01:51 AM

தெருவிளக்கு பழுது
விநாயகபுரம், 21வது வார்டு, குமரன் வீதியில், ' எஸ்.பி -16, பி -24' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த மூன்று மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில், நடந்து செல்வோர் மற்றும் வாகனஓட்டிகள் பாதிப்படைகின்றனர்.
- ராஜம்மாள், விநாயகபுரம்.
பலி கேட்கும் குழி
பாலக்காடு ரோடு, எட்டிமடை ரவுண்டானா அருகே, சூர்யா சூப்பர் மார்கெட் எதிர்புறம், சாலை திருப்பத்தில் தார் சாலை இடிந்து, பாதி சாலை வரை குழியாக உள்ளது. வளைவில் திரும்பும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். உயிரிழப்புகள் நிகழும் முன் விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும்.
- கார்த்திக், க.க.சாவடி.
கழவுநீர் தேக்கம்
சூலுார், கலங்கல், அண்ணா நகரில், சாக்கடை கால்வாய் சரிவர துார்வாரி, சுத்தம் செய்யப்படுவதில்லை. குப்பை அடைத்து கழிவுநீர் பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. உடனடியாக, சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.
- கந்தசாமி, கலங்கல்.
வேகத்தடை வேண்டும்
வடவள்ளி, லட்சுமி நகர் ஆர்ச் முன்பு உள்ள வளைவு ரோட்டில், அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்துகள் நடக்கிறது. பள்ளிகள் நிறைந்த சாலை என்பதால், சாலையை கடக்க மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
- வாணி, வடவள்ளி.
வீட்டிற்குள் வரும் சாக்கடை
புலியகுளம், 64வது வார்டு, போலீஸ் கந்தசாமி வீதியில் மலைபோல் குவிந்துள்ள குப்பையால், கால்வாயில் கழிவுநீர் அடைத்து நிற்கிறது. இதனால், வீட்டிலிருந்து கழிவுநீரை வெளியேற்ற முடியவில்லை. மீண்டும், கழிவுநீர் வீட்டிற்குள்ளே வருகிறது.
- சேகர், புலியகுளம்.
சாலை ஆக்கிரமிப்பு
ஆர்.எஸ்.,புரம், மேற்கு டிவி சாமி ரோட்டில் கடைகளுக்கு வரும் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகின்றன. பாதிசாலையை ஆக்கிரமித்து நிற்கும் இந்த சரக்கு வாகனங்களால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. நெருக்கடியால், அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது.
- பாலமுருகன், ஆர்.எஸ்.புரம்.
புழுதி பறக்கும் சாலை
ஜி.என்.,மில்ஸ், புதிய மேம்பாலம் கீழ், துடியலுார் நோக்கி செல்லும் சர்வீஸ் சாலையில், குழாய் பதிப்பு பணிகளுக்கு பின் சாலை சீரமைக்கவில்லை. பாதி தார் சாலையாகவும், மீதி மண்ணாக இருப்பதால், வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர். புழுதி பறக்கும் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.
- செல்வக்குமார், துடியலுார்.
டெங்கு இங்கு பரவலாம்!
சிங்காநல்லுார், கக்கன் நகர், விநாயகர் வீதியில், கடந்த மூன்றாண்டுகளாக, சாக்கடை கால்வாய் அடைப்பு பிரச்னை நீடிக்கிறது. எப்போதும் தேங்கி நிற்கும் கழிவுநீரால், கடும் துர்நாற்றமும், கொசுத் தொல்லையும் உள்ளது. குழந்தைகள் அடிக்கடி காய்ச்சலால் பாதிப்படைகின்றனர்.
- விதுபாலு, கக்கன்நகர்.
போக்குவரத்து பாதிப்பு
டாடாபாத், எட்டாவது வீதியில், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கிறது. தனிநபர்களால் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறுகலான சாலையால், மற்ற வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர்.
- நாச்சிமுத்து, டாடாபாத்.

