ADDED : அக் 26, 2026 07:26 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் – குன்னுார் சாலையில், மூன்றாவது நாளாக இன்றும் (அக்.,26) போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக, சாலையில் பயணிப்பதை தடுக்க, போலீசார், வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி அனுப்பினர்.
மேட்டுப்பாளையம் – குன்னுார் சாலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி, போலீசார் இச்சாலையில் பலத்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக, பவானி ஆற்றுப்பாலம், கல்லாறு ரயில்வே கேட் மற்றும் துாரிபாலம் இ-–பாஸ் சோதனைச் சாவடி ஆகிய இடங்களில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்வழியாக வரும் அனைத்து வாகனங்களும் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சாலை வழியாக தற்காலிகமாக திருப்பி விடப்படுகின்றன. சில இடங்களில், மாற்று பாதையில் செல்ல மறுத்து, போலீசாருடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், சிறு மற்றும் குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப் பாலம் தொடங்கி கல்லாறு வரையிலான பகுதியில் அமைந்துள்ள உணவகங்கள், தேநீர் கடைகள், பழக்கடைகள் உள்ளிட்டவற்றில் வியாபாரமின்றி முடங்கியுள்ளது. இதனால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
