UPDATED : அக் 29, 2026 11:05 PM
ADDED : அக் 29, 2026 11:00 PM

கோவை: ‘பயிர் மேம்பாட்டிற்கான மூலக்கூறு இனப்பெருக்கம்’ என்ற தலைப்பில் வேளாண் பல்கலையில் 2 நாள் பயிற்சி நடந்தது.
தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானா, டெல்லி மாநிலங்களை சேர்ந்த 27 பேர் இப்பயிற்சியில் பங்கேற்றனர். எஸ்.ஆர்.எம். பல்கலை மற்றும் என்.ஜி.பி. கல்லுாரி மாணவர்கள், உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் ஐசிஏஆர் விஞ்ஞானிகள் மற்றும் தனியார் விதை நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் வெங்கடேசன் பேசியதாவது: இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம், மூலக்கூறு குறிப்பான்களின் அடிப்படைகள் மற்றும் நவீன தாவர இனப்பெருக்கத்தில் அவற்றின் பயன்பாடுகள் குறித்து பயிற்சியாளர்களுக்கு விளக்குவதாகும். வல்லுனர்களின் விரிவுரைகளுடன், பாலிமரேஸ் சங்கிலித் தொடர் வினை தொழில்நுட்பம் மற்றும் மூலக்கூறு குறிப்பான் உதவியுடனான தேர்வு ஆகியவற்றில் செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மரபணு இணைப்பு வரைபடம் உருவாக்குதல், பண்புக்கூறு சார்ந்த மரபணு இடங்களை கண்டறிதல் மற்றும் மரபணு அளவிலான தொடர்பாய்வு போன்ற மேம்பட்ட மரபணுப் பகுப்பாய்வு முறைகள் குறித்தும், மென்பொருட்களைப் பயன்படுத்தியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.இதன் மூலம் மூலக்கூறு இனப்பெருக்க நுட்பங்கள் குறித்த அறிவையும் செய்முறைத் திறன்களையும் மேம்படுத்தி, நவீன மரபணுத் தகவல் சார்ந்த அணுகுமுறைகளைப் பயிர் மேம்பாட்டில் பயன்படுத்த முடியும். இவ்வாறு, அவர் பேசினார். இணைப் பேராசிரியர்கள் கீதாஞ்சலி, கோகிலாதேவி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
