தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மரம்... விவசாயிகளுக்கு வரம்...! l இரட்டிப்பு லாபம் நிச்சயம் l விழிப்புணர்வு ஏற்படுத்தும் வனக்கல்லுாரி

மரம்... விவசாயிகளுக்கு வரம்...! l இரட்டிப்பு லாபம் நிச்சயம் l விழிப்புணர்வு ஏற்படுத்தும் வனக்கல்லுாரி

மரம்... விவசாயிகளுக்கு வரம்...! l இரட்டிப்பு லாபம் நிச்சயம் l விழிப்புணர்வு ஏற்படுத்தும் வனக்கல்லுாரி


ADDED : ஆக 21, 2026 04:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 04:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: ‘மர விவசாயத்தில் ஈடுபட்டால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பல்வேறு தகவல்கள், அரசு நடைமுறைகள் அறிந்து செயல்பட்டால், நன்மை தரும்’ என, நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம், வறட்சி என, இயற்கை இன்னல்களை சமாளித்து வருமானம் ஈட்டும் விவசாயம் என்றால், மரம் விவசாயம் தான் என, வேளாண் வல்லுநர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து ஆராய்ச்சி செய்து, அறிவியல் பூர்வமாக, வணிக மரம் வளர்ப்பு குறித்து, வனக்கல்லுாரி வாயிலாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-

சந்தன மரத்தின் பிறப்பிடமே தமிழகமும், கர்நாடகமும் தான். ஆனால், இன்று உலகளவில் சந்தன மரத்தின் மார்க்கெட்டாக ஆஸ்திரேலியா உள்ளது. இங்கிருந்து கொண்டு செல்லப்படும் விதைகள், மர நாற்றுகள் வைத்து தான், அங்கு பல லட்சம் ஏக்கரில் சந்தனக்காடு உருவாக்கி, அந்த மார்க்கெட்டை அவர்கள் உருவாக்கியுள்ளனர். 40 ஆண்டுகளாக மரம் விவசாயம் குறித்து ஆராய்ச்சி செய்து, அறிவியல் பூர்வமாக நாங்கள் கண்டுபிடித்ததை, தற்போது வணிக மரம் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இந்தியாவின் மரத்தேவை 25 லட்சம் டன். வனக்கல்லுாரியில், வேளாண் சமூக காடுகளை உருவாக்கி, இந்தியாவிலுள்ள பல்வேறு மாநில விவசாயிகளுக்கும், மரம் வளர்ப்பு குறித்து செயல் விளக்கம் அளிக்கிறோம். விவசாயிகள் மரம் வளர்ப்பில் ஈடுபட்டால், நம் நாடு, மரத்தேவைகளில் தன்னிறைவு அடையும். சுமார் 99 சதவீதம் இறக்குமதியை நம்பியுள்ள நாம், எதிர்காலத்தில் ஏற்றுமதி செய்யலாம்.

மரம் வளர்ப்பதினால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மரம் வளர்ப்பின் போது அதிக தண்ணீர் செலவு, விவசாய கூலி செலவு உள்ளிட்டவை ஏற்படாது. ஊடுபயிராக பல பயிர்களை வளர்த்து அதிலும் லாபம் ஈட்டலாம். தேக்கு மரம் வளர்த்து பத்து ஆண்டுகளில் லாபம் ஈட்டலாம். ஆப்பிரிக்க நாடுகள் தான் தேக்கு மரத்தின் சந்தையை தீர்மானிக்கின்றன; அந்நிலை மாற வேண்டும். தேக்கு வளர்ப்பின் போது ஊடுபயிராக மிளகு வளர்த்து, ஆண்டுக்கு சுமார் இரண்டு லட்சம் வரை லாபம் ஈட்டலாம். சவுக்கு மரம் வளர்த்தால் மூன்று ஆண்டுகளில் லாபம் ஈட்டலாம்.

மரம் வளர்ப்பில் ஈடுபடும் முன், சில விஷயங்களை கவனிக்க வேண்டும். தரமான நாற்று மட்டுமே, அதிக லாபத்தை கொடுக்கும். அடுத்து, மார்க்கெட்டில் விலை போகக்கூடிய மரம் எது? அதற்கு மவுசு உள்ளதா என்பது குறித்து, தொழில்நுட்ப ரீதியாக வனக்கல்லுாரியில் நிறைய முன்னெடுப்புகளை எடுத்துள்ளோம்.

பருவநிலை மாற்றங்களால், விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு, வறட்சியிலும் கூட வருமானம் கிடைக்கும் வகையில் மரம் வளர்ப்பு கைகொடுக்கும். சந்தன மரத்தை நாம் வளர்க்க முடியும், ஆனால், அதை அரசு தான் விற்க முடியும். இதுபோன்ற பல்வேறு தகவல்கள், அரசு நடைமுறைகள் தெரிந்து, அதற்கு ஏதுவாக, மரம் விவசாயத்தில் ஈடுபடுவது நன்மை பயக்கும்.

இவ்வாறு, அவர் கூறினார்.----

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us