/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மும்மொழி காலத்தின் கட்டாயம்; கற்பதால் பிரச்னை இல்லை!
/
மும்மொழி காலத்தின் கட்டாயம்; கற்பதால் பிரச்னை இல்லை!
மும்மொழி காலத்தின் கட்டாயம்; கற்பதால் பிரச்னை இல்லை!
மும்மொழி காலத்தின் கட்டாயம்; கற்பதால் பிரச்னை இல்லை!
ADDED : மார் 16, 2025 11:54 PM

- நிருபர் குழு -
மத்திய அரசின், புதிய கல்வி கொள்கை வலியுறுத்தும் மூன்றாவது மொழி வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வி பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அனைவரும், 'புதிதாக ஒரு மொழியைத் தானே கற்கிறோம். இதில் என்ன பிரச்னை' என்று கேள்வி எழுப்புகின்றனர்.
பி.யமுனாராணி, ஆசிரியர், பொள்ளாச்சி: இன்றைய காலகட்டத்தில், பலரும், உயர்கல்வி பயில்வதற்கும், பணி நிமித்தமாகவும் பிற மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு செல்கின்றனர். அவ்வாறு இருக்கையில், மூன்றாவது மொழியை கற்றுக் கொண்டால் மட்டுமே அங்கு சென்று நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள முடியும். எதிர்காலமும் சிறப்பாக இருக்கும். மூன்றாவது மொழியை தேர்ந்தெடுப்பது அவரவரின் விருப்பம். இதில், எந்த தவறும் கிடையாது.
செ.அகல்யா, தனியார் பள்ளி மாணவி: பள்ளி பருவத்திலேயே தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக் கொண்டால், அதிக மொழி அறிவு உடையவர்களாக திகழ்வோம். மூன்றாவது மொழியை கற்கும் ஒருவர், அம்மொழி பேசும் இடத்திற்கு செல்லும் போது சுதந்திரமாக செயல்பட முடியும். எனக்கு, தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளை கற்பதற்கான வாய்ப்பை பெற்றோர் உருவாக்கி தந்துள்ளனர். மூன்றாவது மொழி, அவரவரை செம்மைப்படுத்தும்.
மோகன்ராஜ், ஆங்கில ஆசிரியர், சுவஸ்திக் மெட்ரிக் பள்ளி, நெகமம்: மொழி என்பது நம்முடைய எண்ணத்தையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கருவியாகும். தாய்மொழியில் கல்வி கற்றால் தான் குழந்தைகள் நேரடியாக கல்வி அறிவு பெற முடியும். மும்மொழி கல்வி கொள்ளை வளர்ந்து வரும் நவீன உலகில் ஏற்க கூடிய ஒன்றாக உள்ளது.தாய்மொழி அல்லாத பிற மொழிகளையும் குழந்தைகள் கற்றுக்குக்கொள்ளும்போது, தங்களுடைய மொழி அறிவு வளர்வதுடன் எதிர்கால வேலைவாய்ப்பு சிக்கல்களில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள முடியும்.
கல்வியில் மொழிக்கொள்கை என்பது மாணவர்களின் சுய விருப்பத்தின் பேரில் சுதந்திரமாக இருக்க வேண்டும். கல்வி கற்கும் குழந்தைகள், மூன்றாவது மொழியாக தங்களது விருப்பத்தின் பேரில் ஏதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ளலாம். எதுவும் கட்டாயப்படுத்தும் வகையில் இருக்க கூடாது; நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய கற்றல் அமைய வேண்டும்.
எம்.ஆகாஷ், அரசு கல்லுாரி மாணவர், வால்பாறை: இன்றைய சூழலில், மூன்றாவாது மொழி கற்றுக்கொள்வது மிக அவசியம். தமிழகத்தை விட்டு வெளி மாநிலங்களுக்கு படிப்பதற்காகவோ, வேலைவாய்ப்புக்காக செல்லும் போது, மூன்றாவது மொழி கற்பதின் அவசியம் புரியும். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய மூன்றாவது மொழி அவசியமாகும். மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான மொழி அவசியம். அதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்.
க.அக் ஷயா, கல்லுாரி மாணவி, வால்பாறை: மூன்றாவது மொழி கற்பது அவரவர் தனிப்பட்ட முடிவு. ஒருவரின் தேவைக்கு ஏற்ப மூன்றாவது மொழியை கற்றுக்கொள்ளலாம். கூடுதலாக மொழியை கற்றுக்கொள்வதில் தவறில்லை. வெளியிடங்களுக்கு படிப்பு மற்றும் வேலை வாய்ப்புக்காக செல்லும் போது தான் மும்மொழி கல்வியின் அவசியம் தெரியும். எனவே மாணவர்கள் எதிர்கால நலனை கருதி, மும்மொழி கற்க வேண்டும்.
சுஷீல், தனியார் கல்லூரி மாணவர், கிணத்துக்கடவு: படிக்க, எழுத மற்றும் பேச இரு மொழியும், பேசுவதற்கு கூடுதலாக ஒரு மொழியும் அவசியம். தொழில் ரீதியாக பல மொழிகள் தெரிந்த நபர்களுக்கு, வேலையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் கற்றுக்கொள்ளலாம். உலகளாவிய பயணம் மேற்கொள்ளும் போதும், அங்கு வேலை செய்வதற்கும் அந்நாட்டு மொழி அவசியமாகிறது. எனவே, கூடுதல் மொழி கற்பதில் தவறில்லை.
பரணிப்ரியா, கல்லுாரி மாணவி, உடுமலை: தேசிய கல்வி கொள்கையில் உள்ள, மும்மொழி பாடத்திட்டம், கட்டாய தேவைதான். படித்து முடித்து வேலைக்கும், உயர்கல்விக்கும் செல்லும் இடங்களில், பலரும் மொழி தெரியாமல் பல இன்னல்களை சந்திக்கிறோம். பள்ளிக்கல்வி, உயர்கல்வி முடித்து மூன்றாவது மொழி கட்டாயத்தேவை என அறிந்தபின் சிரமப்பட்டு கற்றுகொள்வதற்கு, பள்ளிப்பருவம் முதல் கற்றுக்கொள்வது ஏற்கத்தக்கதுதான்.
சதீஷ்குமார், தனியார் கல்லுாரி முன்னாள் மாணவர் சங்கத்தலைவர், உடுமலை: மும்மொழி பாடத்திட்டத்தால், அனைவருக்கும் சமமான ஒரு கல்வி நிலை கிடைக்கும். ஆங்கிலம் அனைத்து பள்ளிகளிலும் உள்ளது. ஆனால், அவரவர் தாய்மொழியில் எழுதவும், முறையாக படிப்பதற்கும் தெரிவதில்லை. இந்த மும்மொழி கல்விதிட்டத்தில், தாய்மொழி குறித்து மாணவர்கள் கட்டாயம் படிக்கும் நிலை இருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல், எந்த மொழியையும் திணிப்பதற்கான திட்டமாக இல்லை. பள்ளிகளில் இந்த திட்டம் வருவதால், மாணவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.